கே.ஜே.: 2019 வரவு செலவுத் திட்டம், B40 பிரிவினரை ஓரங்கட்டிவிட்டது

நாடாளுமன்றம் | ரெம்பாவ் எம்பி, கைரி ஜமாலுட்டின், 2019 பட்ஜெட் குறைந்த வருமானம்  பெறும் குழுவினரை (B40) ஓரங்கட்டிய ஒரு “கொடுமையான” திட்டம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

B40 குழுவினருக்கு முந்தைய பிஎன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல உதவிகள், தற்போது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் மறக்கப்பட்டுள்ளது எனக் கைரி கூறியுள்ளார்.

“RM30 பில்லியன் பெட்ரோனாஸ் சிறப்பு ஈவுத்தொகையைக் கணக்கில் எடுக்கவில்லை என்றால், இவ்வாண்டு வரவு செலவு திட்டத்தைக், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் ஏதுமில்லை.

“நீங்களும் ஏறக்குறைய அதே அளவு பணம்தான் ஒதுக்கியுள்ளீர்கள், நீங்களும் B40 குழுவினருக்கான திட்டங்களை வகுத்திருக்க வேண்டும், ஆனால் நீங்கள் அதனைச் செய்யவில்லை.

“என்னைப் பொறுத்தவரை, இந்த வரவுசெலவுத் திட்டம் B40-க்கு மிகவும் கொடூரமானதாக இருக்கிறது, மேலும் நடுத்தர வர்க்கத்திற்கு (M40) இதில் எதுவும் இல்லை,” என்று இன்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

உண்மையில், மக்களுக்கான பல உதவித் திட்டங்கள் குறைக்கப்பட்டதால், இந்த பட்ஜெட் மீது, அரசாங்கத்தின் சில எம்பிகள் கூட அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

“நடுத்தர வர்க்கத்திற்கு வருமான வரி மறுசீரமைப்பை நான் முன்மொழிந்திருக்கிறேன், அதைபோன்றே பணக்காரர்களுக்கான வருமான வரியையும் மறுசீரமைப்பு செய்ய பரிந்துரைக்கிறேன், இதன்வழி பணக்காரர்களுக்கு அதிக வரிகளை விதித்து, M40 மற்றும் B40 குழுக்களுக்கு உதவிகள் வழங்க முடியும்,” என்று அவர் கூறினார்.