1மலேசியா பால் திட்டம் இவ்வாண்டு இல்லை

1மலேசியா பால் திட்டத்தை (பிஎஸ்1எம்) தொடர்வதற்கு, அரசாங்கம் தற்போது திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை.

அத்திட்டத்தை மீண்டும் தொடர்வதற்கான அனைத்து முன்மொழிவுகளும், 2019 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டைப் பொறுத்தே அமையும் என, நேற்றிரவு நாடாளுமன்றத்தில், மலேசியாகினி  சந்தித்தபோது, துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ ச்சிங் தெரிவித்தார்.

பிஎஸ்1எம், சத்துணவு திட்டத்தின் (ஆர்.எம்.டி.) கீழ், பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவசப் பால் விநியோகிக்கும் ஒரு திட்டமாகும். 2018 பட்ஜெட்டின் படி, இவ்வாண்டு ஜனவரி முதல் பள்ளிகளுக்கு விநியோகம் செய்திருக்க வேண்டிய பால், இதுவரை வந்து சேரவில்லை.

பிஎன் அரசாங்கம், 2018-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் RM299 மில்லியனை ஆர்.எம்.டி.-க்காக ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கல்வி அமைச்சர், மஹ்ட்சிர் காலிட், பிஎஸ்1எம் இலவசப் பால் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், அதுபற்றி விசாரிப்பதாகவும் கூறியிருந்தார்.

எனினும், நாடாளுமன்றத்தில் இன்று சந்தித்த போது, அதுபற்றி கருத்து தெரிவிக்க அவர் விரும்பவில்லை.

மலேசியாகினி முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் பி கமலநாதனின் கருத்துக்களைப் பெற முயற்சித்து வருகிறது, ஆனால் இதுவரை அவரிடமிருந்து எந்தவொரு தகவலையும் பெற முடியவில்லை.