‘ரைஸ், ரஃபிடா இருவரையும், அம்னோ மூத்தத் தலைவர்கள் என்று அழைக்க தகுதியில்லை’

அம்னோ மூத்தத் தலைவர்களில் ஒருவரான முஸ்தபா யாக்குப், ரைஸ் யாத்திம் மற்றும் ரஃபீடா அஸீஸ் இருவரும், அம்னோ மூத்தத் தலைவர்கள் என்று அழைக்கும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

‘கொள்கை பிடிப்புகொண்ட’ மற்ற மூத்தத் தலைவர்கள் யாரும், கட்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் மூத்த அம்னோ தலைமைச் செயலாளருமான முஸ்தாஃபா சொன்னார்.

“(கட்சியிலிருந்து வெளியேறுதல்) … இவர்கள் எம்மாதிரியான மூத்தத் தலைவர்கள், ரைஸ் மற்றும் ரஃபீடா போன்றவர்கள், இவர்கள் அம்னோ மூத்தத் தலைவர்கள் அல்ல.

“கட்சியை விட்டு வெளியேறியவர்களை, அம்னோ மூத்தத் தலைவர்கள் என்று அழைக்க வேண்டாம். கட்சியின் போராட்டத்திற்கு ஒத்துழைக்கும் 800,000 உறுப்பினர்கள் அம்னோவில் இருக்கிறார்கள்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

முன்னதாக, கோலாலம்பூரில் நடந்த ஒரு விழாவில், நெகிரி செம்பிலான் பெர்சத்து தலைவரான ரைஸ், மேலும் அதிகமான அம்னோ உறுப்பினர்கள் பெர்சத்துவில் சேர இருப்பதாகக் கூறினார்.

ஜொகூர், கிளாந்தான் மற்றும் கெடாவைச் சேர்ந்த அதிகமான உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

முன்னாள் அமைச்சரான ரஃபீடாவை, அம்னோ உறுப்பினர் பதவியிலிருந்து கட்சி முன்னமே நீக்கிவிட்டதால், அவர் இன்னும் அம்னோவின் மூத்தத் தலைவர் அல்ல என்றும் முஸ்தாஃபா சொன்னார்.