‘மலேசியன் என்று சொல்லவே வெட்கப்பட்டேன்’, எம்ஏசிசி தலைவர்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் முகம்மட் ஷுக்ரி அப்துல்லா, நாட்டில் ஊழல் மிக மோசமான நிலையை எட்டியிருந்ததால் தன்னை மலேசியன் என்று காட்டிக்கொள்ளவே வெட்கப்பட்டாராம்.

மலேசியாவில் ஊழல் வருத்தம் தரும் அளவுக்கு மோசமாக, மிக மோசமாக இருந்தது என்று புத்ரா ஜெயாவில் எம்ஏசிசியும் கல்வி அமைச்சும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் ஷுக்ரி கூறினார்.

முப்பதாண்டுகளுக்கு மேலாக ஊழலை எதிர்த்துப் போராடிவரும் எம்ஏசிசி தலைவர் 2016 அக்டோபரில் பணி ஓய்வு பெற்றார்.

பணி ஓய்வு பெற்றிருந்தாலும் மே மாதம் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததும் அவர் மீண்டும் அழைத்துக்கொள்ளப்பட்டார்.

“என்னை யாராவது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால் மலேசியாவிலிருந்து என்று சொல்ல வெட்கப்பட்டேன். இந்தோனேசியா என்று சொல்வேன்.

“அப்போது (ஊழல்) அவ்வளவு மோசமாக இருந்தது”, என்றார் ஷுக்ரி.