மலேசிய அனைத்துலக இஸ்மாமியப் பல்கலைக்கழகத் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகியதும் அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்குப் பலர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மஸ்லீ மாலிக் இன்று கூறினார்.
அவர்கள் அனைவரும் உலகப் புகழ்ப் பெற்றவர்கள் என்றும் அரசியல் பதவி வகிக்காதவர்கள் என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.
மஸ்லீ ஐஐயும் தலைவர் பதவியிலிருந்து வெளியேறுவதை நேற்று உறுதிப்படுத்தினார்.
பதவி விலக முன்பே முடிவு செய்து விட்டதாகக் கூறிய சிம்பாங் ரெங்காம் எம்பியான அவர் , ஐஐயும் பட்டமளிப்பு விழாவுக்கும், அடுத்த தலைவரின் நியமனத்துக்கும் காத்திருப்பதாகச் சொன்னார்.
விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அதில் கல்வி அமைச்சு அவரிடமிருந்து பறிக்கப்படும் என்று கூறப்படுவதையும் மஸ்லீ மறுத்தார்.
அண்மையில் பிரதமரைச் சந்தித்தது அதற்காக அல்ல என்றும் தேசிய கல்விப் பாடத் திட்டத்தை வலுப்படுத்துவது பற்றிப் பேசுவதற்காகவே என்பதையும் அவர் வலியுறுத்தினார்.