சொஸ்மா, பொடா, பொக்கா சட்டங்களை இரு குழுக்கள் ஆராய்கின்றன- உள்துறை அமைச்சர்

அரசாங்கம் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சொஸ்மா) , பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2015(பொடா), குற்றச் செயல் தடுப்புச் சட்டம் 1959 (பொக்கா) ஆகியவற்றை விரிவாக ஆராய இரண்டு குழுக்களை அமைத்திருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.

அக்குழுக்கள் தடுப்புக் காலம் மிகவும் நீண்டிருப்பதாகவும் கைது செய்வதற்கு போலீசுக்கு அளவற்ற அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சட்டங்கள்மீதான நீதிமன்றங்களின் அதிகாரம் பலவீனமாக உள்ளதாகவும் கூறப்படுவதை ஆராய்வதாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார்.

“இப்போது ஆய்வு இறுதிக் கட்டத்தை அடைந்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் கொடுப்பதற்கு வரைவு அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கின்றது. அதன் பின்னர் அது அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கு விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும்.

“முடிந்தால் இந்தக் கூட்டத்திலேயே தாக்கல் செய்யப்படும் அல்லது அடுத்த மார்ச் மாதக் கூட்டத்திலேயாவது தாக்கல் செய்யப்படும்”, என முகைதின் மக்களவையில் கூறினார்.