குடும்பம், மகளிர் மற்றும் சமூக மேம்பாடு அமைச்சின், துணை அமைச்சர் ஹன்னா இயோ, விவாகரத்துக்கான காரணங்களைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது என்று இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, மனைவிமார்கள் இரவில் துணி துவைத்தல், குழுவாக வெளியில் செல்ல விரும்புதல், மனைவி காரில் உண்பதை விரும்பாத கணவர், கணவர் குறைந்த வருமானம் பெறுதல் மற்றும் தூங்கும்போது குறட்டை விடுதல் போன்ற காரணங்களுக்காக விவாகரத்து ஏற்படுவதாக இயோ மக்களவையில் தெரிவித்தார்.
சிலாங்கூர் ஷரியா இலாகாவிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களை மேற்கோளிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
அவற்றுள் முதல் இரண்டு காரணங்களை மக்களவையில் கூற தனக்கு சங்கடமாக இருந்தது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அமைச்சின் புள்ளிவிவரப்படி, திருமணமாகி 5 ஆண்டுகளில் விவாகரத்தான சம்பவங்கள், 2013 – 2017 இடையே, கூட்டரசு பிராதேசத்தில் 2,932 வழக்குகள் உள்ளன என்றார். மற்ற மாநிலங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மலாய்க்காரர் அல்லாத அதே பிரிவினருக்கு, அதே காலக்கட்டத்தில் 14,440 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசியப் பதிவு இலாகாவின் புள்ளிவிவரம் காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.
திருமணத்தின் முதல் ஐந்து ஆண்டுகள், கடினமான காலகட்டம் என்று அவர் கூறினார்.
2014-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, விவாகரத்து வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டவை என்று அவர் மேலும் கூறினார்.