அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் அம்னோ தலைவர் ஈசா சமட் தேசிய இருதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
69 வயதான முன்னாள் பெல்டா தலைவரின் உடல் நிலை “நன்றாகவே உள்ளது” என்று தெரிவித்த அவரின் துணைவியார் ஷர்லிசா முகம்மட் காலிட், அது வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் என்றார்.
“அவரது உடல்நிலை பற்றிப் பலரும் அழைத்துக் கேட்கிறார்கள்.
“இது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான்”, என்று ஷர்லிசா தெரிவித்ததாக த ஸ்டார் ஆன்லைன் கூறியது.
ஈசா 22 ஆண்டுகள் நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக இருந்தவர். அண்மையில் அம்னோவிலிருந்து விலகி போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
முன்பு அவர் லிங்கி சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெம்போல் எம்பி ஆகவும் இருந்துள்ளார்.
இவ்வாரத் தொடக்கத்தில் சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. ஈசா 2011க்கும் 2017க்குமிடையில் பெல்டா தலைவராக இருந்த காலத்தில் சரவாக்கில் ஒரு தங்குவிடுதியை அதிகப்படியான விலைக்கு வாங்கியதற்காகக் குற்றஞ்சாட்டப்படலாம் என்று சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி அது அறிவித்திருந்தது.