பெய்ரூட் நிறுவன நகைகள்தாம் என்பதை உறுதிப்படுத்த போலீசுக்குக் கூடுதல்அவகாசம் தேவை

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் தொடர்புள்ளதாக கருதப்படும் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட 12,000 பொருள்களில் தன்னுடையவை என்று லெபனானிய நிறுவனம் உரிமை கொண்டாடும் யுஎஸ்$14.79 மில்லியன் மதிப்புள்ள நகைகளை உறுதிப்படுத்திக்கொள்ள அரசாங்கத்துக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இது இன்று உயர் நீதிமன்ற நீதி ஆணையர் வொங் சீ லின்னிடம் தெரிவிக்கப்பட்டது.

பெய்ரூட் நகை நிறுவனமான குளோபல் ரோயல்டி டிரேடிங் எஸ்ஏஎல் இவ்வாண்டு முற்பகுதியில் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கு அனுப்பிய 44 நகைகள் தன்னிடம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு நீதிமன்றத்திடம் மனுச் செய்துள்ளது.

கைப்பற்றிய பொருள்களை 12 மாதங்களுக்கு வைத்துக்கொள்ளும் உரிமை போலீசுக்கு உண்டு என்று உயர் கூட்டரசு வழக்குரைஞர் அலிஸ் லொக் கூறினார்.

போலீசையும் அரசாங்கத்தையும் பிரதிநிதிக்கும் லொக், குறிப்பிட்ட அக்காலப் பகுதியில் அந்நிறுவனம் நகைகளுக்கு உரிமை கொண்டாடி மனுச் செய்யலாம் என்றார்.

என்றாலும் “கைப்பற்றப்பட்ட சுமார் 12,000 பொருள்களில் இந்த 44 பொருள்களை அடையாளம் காண போலீசுக்குச் சற்றுக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது”, என்றார்.