பேராக், துரோனோ விவசாயிகளின் மேல் முறையீட்டு மனு வெற்றி

பேராக் மந்திரி பெசார் வாரியத்திற்கு எதிராக, துரோனோ விவசாயிகள் 8 பேர் செய்த முறையீட்டு மனுவை, புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுகொண்டது. அதுமட்டுமின்றி, ஈப்போ உயர்நீதிமன்றத்தின் கட்டாய வெளியேற்றத் தீர்ப்பையும் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

அவ்விவசாய நிலத்தின் உரிமையாளராக இருக்கும் பேராக் மந்திரி பெசார் வாரியத்தின் அனுமதி இல்லாமல், அவர்கள் அந்த நிலத்தில் பயிர் செய்திருந்தாலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு விவசாயம் செய்துவரும் இவர்கள், இதற்கு முன்னர் வேறு வழிகளில் அனுமதி பெற்றிருக்கலாம் என்று அனுமானிக்க முடிகிறது என்பதையும் நீதிபதி ஹமிட் சுல்தான் சுட்டிக்காட்டினார்

நீண்ட காலமாக அங்கு விவசாயம் செய்துவரும் இவர்களை, முழுவிசாரணையின்றி வெளியேற்றினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகளின் மனுவை ஏற்றுக்கொண்டதோடு, இவர்களை வெளியேற்ற விரும்பினால் முறையாக முழுவிசாரணை கோரும் புதிய ரிட் சம்மனை ஈப்போ உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட பின்னர், நீதிபதி தனது தீர்ப்பினை வழங்கினார்.

8 விவசாயிகளின் சார்பாக வழக்குரைஞர்கள் அம்பிகாவும் திருமங்கையும் ஆஜராகினர்.