பிகேஆர் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ள அன்வார் இப்ராஹிமுக்கு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பெரிய உறுப்புக்கட்சிக்குத் தலைமை ஏற்கும் பொறுப்பு மட்டுமின்றி; கட்சிக்குள் இருக்கும் ‘அரசியல் முகாம்’ கலாச்சாரத்தைச் சமாளிக்க வேண்டியப் பெரிய பணியும் காத்திருக்கிறது.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பாதிக்கக்கூடிய, பிகேஆர் தேர்தல் உட்பூசலினால் ஏற்பட்ட கட்சி பிளவுகளைத் தவிர்க்க, ‘அரசியல் அணி’ கலாச்சாரத்திற்கு அவர் உடனடி தீர்வுகாண வேண்டும்.
இப்பிரச்சினை குறித்து கருத்துரைத்த அரசியல் ஆய்வாளரும் பார்வையாளருமான டாக்டர் சந்திரா முஷாஃபார், ஹராப்பான் கூட்டணியின் மிகப்பெரியப் பாகமான பிகேஆர், இந்த ஆரோக்கியமற்ற கலாச்சாரத்தை உடனடியாக ‘குணப்படுத்த’ வேண்டும் என்றார்.
“பிகேஆர் மற்றும் ஹராப்பான் அரசாங்கத்திற்கு இது ஒரு பெரிய பிரச்சனை … அணி சார்ந்த அல்லது குழுவாதக் கலாச்சாரம் தொடர்ந்தால், கட்சியில் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
“இப்போது அவர்கள் (பி.கே.ஆர்) அதிகாரத்தை (அரசாங்கத்தின் ஒரு பகுதியாக) வைத்திருக்கின்றனர், அந்த அடிப்படையில் கட்சியின் நிலைப்பாட்டை வலுப்படுத்த அணி சார்ந்த (அரசியல்) கலாச்சாரத்தை முறியடிக்க, பிகேஆர் ஒரு தீர்வுகாண வேண்டும்,” என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
பிகேஆர் துணைத் தலைவராக இருந்து, 2001 டிசம்பரில் கட்சியிலிருந்து விலகுவதாக சந்திரா அறிவித்தார். பிகேஆர்-இல் ஆரம்பத்திலேயே இந்தக் கலாச்சாரம் இருந்ததை ஒப்புக்கொண்ட அவர், இன்று அது மிகவும் தீவிரமாக உள்ளது என்றார்.
“இது ஒரு புதிய விஷயமல்ல, ஆனால் முன்னர் இருந்ததைவிட, இப்போது அது (குழு அரசியல்) மிகவும் மோசமான நிலையில் இருப்பதை நான் பார்க்கிறேன், எனவே, புதியத் தலைவர்களுக்கு எதிர்காலத்தில் இது ஒரு சவாலாக இருக்கும், குறிப்பாக நடந்து முடிந்த பிகேஆர் தேர்தல் நடைமுறை (இந்த ஆண்டு),” என்றார் அவர்.
“பிகேஆரின் பிரதான தலைவர்கள், புதியதாக தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள அன்வார் போன்றவர்கள், கட்சியில் முகாம் அல்லது குழுவாதப் பிரச்சனைகளைக் கையாள்வதில் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர், முகமது அஸ்மின் அலி மற்றும் பாண்டான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் முகமதூ ரஃபிசி ரம்லி இருவருக்கும் இடையில், கட்சிக்குள் மறைமுகமாக ‘அணி’ உருவாக்கப்பட்டு, தீவிரமான போட்டி நடந்து வருகிறது.
ரஃபிசி தொகுதி தேர்தல் செயல்முறையைப் பகிரங்கமாக விமர்சித்து வந்தது, பிரதமர் டாக்டர் மகாதீருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் அஸ்மின், அன்வார் விசுவாசிகளின் நடவடிக்கைகளைக் குற்றம் சொன்னது போன்ற பல ‘நாடகங்கள்’ பிகேஆர் தேர்தலின் போது அரங்கேறி, பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் வேளை, பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் 70,550 வாக்குகளைப் பெற்று, ரஃபிசிக்கு (66,594 வாக்குகள்) முன்னிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற இறுதி முடிவுகள் ‘கெஅடிலான் தேர்தல் 2018’ எனும் டுவிட்டர் செய்தில் வெளிவந்துள்ளது.
இதற்கிடையில், மலேசியப் புத்ரா பல்கலைக்கழகப் (யூ.பி.எம்) பேராசிரியர் டாக்டர் ஜாஹிட் அஹ்மாட் மற்றும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் சிவமுருகன் பாண்டியன் போன்ற அரசியல் ஆய்வாளர்கள், அன்வார் கட்சியின் உயர்மட்ட தலைமையில் இருந்து, கீழ்நிலை உறுப்பினர்கள் வரை சமரசம் செய்வதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
“இந்தத் தேர்தலுக்குப் பின்னர், தோற்றுப்போன தரப்பினர் மற்றும் அவர்தம் ஆதரவாளர்களை அன்வார் திறம்பட கையாள வேண்டும், அவர்களும் கட்சிக்கு தேவையானவர்கள், அவர்களையும் கட்சி மதிக்கிறது என்பதை அவர்களுக்கு உணரச்செய்ய வேண்டும். கட்சி உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய, தங்களுக்கிடையிலான போட்டிகள் அனைத்தையும் விட்டு, கட்சியைப் பலப்படுத்தி, 15-வது பொதுத் தேர்தலுக்குத் தயாராக, அவரால் (அன்வார்) ஒரு நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்,” என்று ஜாஹிட் பெர்னமாவிடம் கூறினார்.
இதற்கிடையில், அரசியல் கல்வியறிவு மற்றும் கட்சி இலக்குகள் குறித்து உறுப்பினர்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும், கட்சி போராட்டத்தில் பதவிகள் மற்றும் தரவரிசை முக்கியமல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள செய்ய வேண்டும் என்று சிவமுருகன் பாண்டியன் கூறியுள்ளார்.
மேலும், கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்ட, உடனடி நடவடிக்கை எடுப்பதை அன்வார் உறுதிசெய்ய வேண்டும், அதேசமயம் வெற்றியடைந்தவர்கள் தோல்வியடைந்தவர்களை ஓரங்கட்டக் கூடாது என்றும் அவர் கூறினார்.
- பெர்னாமா