அஸ்மின் அணி மிகப் பெரிய வெற்றி பெறலாம், ரபிசி அணியில் அக்மால் மட்டுமே நம்பிக்கை நட்சத்திரம்

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அஸ்மின் அலியும் அவரது அணியும் மிகப் பெரிய வெற்றி பெறக் கூடும். அதே வேளை அவரை எதிர்த்துக் களமிறங்கிய ரபிசி ரம்லி அணி பிகேஆர் இளைஞர் பகுதியைக் கைப்பற்றும் சாத்தியம் உள்ளது.

இரு அணிகளிலிருந்தும் கிடைக்கும் தகவல்களைப் பார்க்கையில் இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கு டாக்டர் அஃபிப் பஹார்டிக்கும் அக்மால் நசிருக்குமிடையில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.

அஃபிப், அஸ்மினின் விசுவாசி என்பது தெரிந்ததே. அக்மால் ரபிசியால் உருவாக்கப்பட்டவர் அவரின் தளபதி.

இவ்விருவருக்குமான மோதலில்  வெற்றி யாருக்கு   என்பதை இப்போதைக்கு மலேசியாகினியால் முடிவு செய்ய இயலவில்லை.

2014-இல், நிக் நஸ்மி நிக் அஹமட் பிகேஆர் இளைஞர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அஸ்மின் ஆதரவாளர் அல்ல. ஆனால் , அப்பகுதியின் செயல்குழு உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் அஸ்மின் ஆதரவாளர்களாக இருந்தனர்.

இப்போதைய தேர்தலில் அக்மால் வெற்றி பெற்றால் அவரின் ஆதரவாளர்களைச் செயல்குழுவுக்குள் கொண்டுவரும் சாத்தியம் உள்ளது.

ஆனால், ஒன்று மட்டும் உறுதி. இளைஞர் பகுதி துணைத் தலைவர் அஸ்மின் ஆள்தான். துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஹில்மான் இதாம் அதிக அளவு வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறார். அவரை எதிர்க்கும் ரபிசி அணியைச் சேர்ந்த ரேய்மண்ட் அஹுவார் அவரை எட்டிப் பிடிக்கும் தூரத்தில்கூட இல்லை.

இதனிடையே, பிகேஆர் மகளிர் பிரிவு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை முறையே ஹனிசா தல்ஹாவும் டாக்டர் டரோயா அல்வியும் வெற்றி கொள்வார்கள் என்று தெரிகிறது. இருவருமே அஸ்மின் ஆதரவாளர்கள்.