ஊழல் : ரொஸ்மா மற்றும் ரிஸாலுக்குத் தலா RM1 மில்லியன் ஜாமீன்

சரவாக் கிராமப்புறப் பள்ளிகளில், சூரிய சக்தியை விநியோகித்தல் மற்றும் நிறுவுதல் பணி திட்டத்தில், RM1.5 மில்லியன் இலஞ்சம் கேட்டது மற்றும் பெற்றது தொடர்பிலான 2 குற்றச்சாட்டுகளில், தான் குற்றவாளி அல்ல என்று முன்னாள் பிரதமரின் மனைவி, ரொஸ்மா மன்சோர் கூறியதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவரை ஒருவரின் உத்தரவாதம் மற்றும் RM1 மில்லியன் பிணையில் விடுதலை செய்தது.

நீதிபதி அஸ்மான் அஹ்மட், ரோஸ்மா, 66, RM 500,000 ஜாமின் பணத்தை இன்று செலுத்த வேண்டுமென்றும், மீதப் பணத்தை ஏழு நாள்களுக்குள் செலுத்த வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்.

முன்னதாக, துணைப் பொது வழக்குரைஞர், உமர் சைஃபுடின் ஜாஃபர், ஒருவரின் உத்தரவாதத்தோடு, RM1 மில்லியன் பிணை மற்றும் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தார்.

ரோஸ்மாவைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் கீதன் ராம் வின்சென்ட், பிணைப் பணத்திற்கு ஒப்புக் கொண்டார், ஆனால் ரொஸ்மாவின் கடப்பிதழ் மற்றொரு வழக்கிற்காக, வேறு ஒரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், பிணைப் பணத்தைச் செலுத்த, 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், உமர் சைஃபுடின், கீதன் ராம்மின் விண்ணப்பத்தை மறுத்தோடு, ஒரே நேரத்தில் RM1 மில்லியன் மொத்தத் தொகையையும் செலுத்த வேண்டும் என்று கோரினார்.

இன்றைய வழக்கை செவிமடுக்க, நஜிப் இராசாக் நீதிமன்றம் வந்திருந்தார். அவரோடு, அம்னோ தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா, பெர்லிஸ் முன்னாள் மந்திரி பெசார் ஷஹிடான் காசிம், கப்பாளா பத்தாஸ் எம்பி ரீஷால் மெரிக்கான் நைனா மெரிக்கான் மற்றும் முன்னாள் உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சர் ஹம்ஸா ஜைனுடின் ஆகியோரும் இருந்தனர்.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை, எதிர்வரும் டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்னொரு நீதிமன்றத்தில், இதே வழக்குத் தொடர்பில், நஜிப்பின் முன்னாள் உதவியாளர் ரிஷால் மன்சோர், 44, நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். தனக்காகவும் ரொஸ்மாவுக்காகவும் இலஞ்சம் கேட்டது மற்றும் பெற்றது தொடர்பிலான குற்றச்சாட்டிற்கு, RM1 மில்லியன் ஜாமீன் மற்றும் இருவரின் உத்தரவாதப் பிணையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

RM 500,000 ஜாமின் பணத்தை இன்றும், மீதப் பணத்தை நவம்பர் 22-ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென்றும் நீதிபதி ரொஷினா ஆயோப் தீர்ப்பளித்தார். அதுமட்டுமின்றி, வழக்கு முடியும் வரை, குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும் அவர் சொன்னார்.

இவ்வழக்கு விசாரணை நவம்பர் 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

-பெர்னாமா