காதிர் : சட்டத்தை மீறாத வரை, நஜிப் எந்த அறிக்கையையும் வெளியிடலாம்

சட்டத்திற்கு முரணாக இல்லாத வரை, சமூக ஊடகத்தில் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு, நஜிப் துன் இரசாகிற்குச் சுதந்திரம் உண்டு என்று ஏ காதிர் ஜாசின் கூறினார்.

அவருக்குத் தெரிந்தவரை, குற்றஞ்சாட்டப்பட்ட நபர், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தவிர்த்து, நீதிமன்றத்திற்கு வெளியில் வேறு அறிக்கைகளை வெளியிடும் உரிமை உண்டு என்று, அம்முன்னாள் பிரதமரின் செய்தி ஊடகம், தகவல் தொடர்பு ஆலோசகரான கதிர் தெரிவித்தார்.

“அவர் சட்டத்தை மீறவில்லை என்றால், நாம் அவரைத் தடுக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அவரை வெளியேற்றியப் பிறகு, யாரும் அவரை ஆதரிப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் இன்னும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்றால், அவர் பேசட்டும்,” என்று அவர் கூறினார்.

லீ ஹிஷாம்முடின் ஆலென் மற்றும் கிளேட்ஹில் சட்ட நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த, ‘மே 9 பின்னாய்வு – புதிய மலேசியாவில் நாம் எதை நோக்கி செல்கிறோம்’ என்ற செராமாவில், பங்கேற்பாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் ஏன், ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தடுப்புக் காவல் உடையான ஆரஞ்சு நிற ஆடையை அணியவில்லை என்றக் கேள்விக்கு, எம்ஏசிசியின் முடிவு தனக்கும் அதிர்ச்சியளித்தது என்று கூறிய காதிர், கைது செய்யப்படும் ஒவ்வொரு நபரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்திற்கு எதிராகக் குரல் எழுப்பத் தயாராக இருக்க வேண்டும் என்று அங்கு கூடியிருந்தவர்களில் பெரும்பான்மையான,  வழக்கறிஞர்களை அவர் கேட்டுக்கொண்டார், நீதி வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, 4 ஊழல் குற்றச்சாட்டுகள், 21 பணமோசடி குற்றச்சாட்டுகளுக்காக  எம்ஏசிசி  சட்டத்தின்  பிரிவு 23 (1)-ன் கீழ் கைது செய்யப்பட்டு, ஓரிரவு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நஜிப், செப்டம்பர் 20-ம் தேதி, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட போது, எம்ஏசிசி-யின் லாக்-அப் சட்டை அணியாமலும் கைகளில் விலங்கு பூட்டப்படாமலும் இருந்தார்.

நஜிப் காலகட்ட தலைவர்கள் மீது மட்டுமே அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது, டாக்டர் மகாதிர் காலகட்டத்தில் இருந்த தலைவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு, அரசாங்கம் பாரபட்சமாக நடந்துகொள்ளவில்லை என்று காதிர் கூறினார்.

“நஜிப் துன் மகாதிர் காலத்தில் இருந்தவர்தான், இளைய வயதில் இருந்த நஜிப்பை ஒரு மந்திரி பெசாராக உருவாக்கியதும் துன் மகாதிர்தான், மலேசிய வரலாற்றில் ஆக இளைய வயதில் மந்திரி பெசார் ஆனது நஜிப்தான்,” என்று அவர் கூறினார்.

-பெர்னாமா