கேஜே : ‘ஃபன் மை ஹோம்’ திட்டத்தால் இலாபமடையப் போவது முதலீட்டாளர்களும் மேம்பாட்டாளர்களும் மட்டுமே

2019 வரவு செலவுத் திட்டத்தில், நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ள ‘ஃபன் மை ஹோம்’ (FundMyHome – என் வீட்டிற்கு நிதியளி) வீட்டு உரிமையாளர் திட்டம், முதலீட்டாளர்களுக்கும் மேம்பாட்டாளர்களுக்கும் மட்டுமே பயனளிக்கும் என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைய்ரி ஜமாலுடின் (கேஜே) தெரிவித்தார்.

வீடு வாங்க விரும்பும் குறைந்த வருவாய் பெறும் மக்கள் மற்றும் முதல் வீடு வாங்கும் இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கவில்லை என்றார் அவர்.

“அத்திட்டம் ஏறக்குறைய இப்படி கூறுகிறது, வீட்டின் விலையில் 20 விழுக்காடு செலுத்தினால், நாம் அந்த வீட்டில் 5 ஆண்டுகள் வசிக்கலாம்.

“நமக்கு அந்த வீடு சொந்தமில்லை. 80 விழுக்காடு வீடு, நமக்கு யார் என்றே தெரியாத முதலீட்டாளர்களுக்குச் சொந்தமானவை,” என்று நேற்று இரவு, புத்ரா உலக வாணிப மையத்தில், அம்னோ தகவல் பிரிவு ஏற்பாடு செய்திருந்த மக்கள் பொருளாதார ஊக்குவிப்பு சொற்பொழிவில் அவர் பேசினார்.

‘ஃபன் மை ஹோம்’ திட்டத்தில், வீட்டு விலையில் 20 விழுக்காட்டினை – சட்ட கட்டணங்கள் சேர்க்கப்படாமல்- தங்கள் சொந்தப் பணத்திலோ அல்லது வங்கி கடன்கள் மூலமாகவோ வீடு வாங்குவோர் செலுத்த வேண்டும்.

மீதமுள்ள 80 விழுக்காட்டிற்கு முதலீட்டாளர் நிதியளித்து உதவுவார் அல்லது வீடு வாங்குபவர் தங்கள் ஊழியர் சேமநிதி (ஈபிஎஃப்) கணக்கிலிருக்கும் பணத்தைப் பயன்படுத்தலாம்.

கடந்த நவம்பர் 12-ம் தேதி, மலேசியர்கள் சொந்த வீடு பெற்றிட உதவும் வகையிலேயே அரசாங்கம் இந்த மாற்று திட்டத்தை வழங்கியுள்ளது, ஆனால் அதில் முடிவெடுக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியிருந்தார்.

“இது ஒரு மாற்று வழி, மக்கள் தெரிவு செய்ய நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இத்திட்டத்தினால் நன்மை பெறப்போகும் தரப்பினர் யார் என்று கேஜே கேள்வி எழுப்பியுள்ளார்.

“இது யாருக்காக? இது முதலீடு செய்யவுள்ள பணக்காரர்களுக்காக, குறைந்த வருமானம் பெறும் ஏழைகளுக்கு அல்ல, முதல் வீடு வாங்க விரும்பும் இளைஞர்களுக்கு அல்ல.

“நான் அரசாங்கத்திடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், 10 விழுக்காடு வைப்பு தொகை செலுத்தவே இளைஞர்களால் முடியவில்லை, இதில் 20 விழுக்காடு எப்படி செலுத்துவார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.