ம.இ.காவின் புதிய தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நாடாளுமன்ற மேலவை தலைவர் எஸ். விக்னேஸ்வரன் தனது கட்சியைக் காப்பாற்ற எடுத்துக் கொள்ளும் முயற்சிக்குப் பாராட்டு. ஆனால் அதனை நியாயமாக, நேர்மையாக, புத்திசாலித்தனமாக மேற்கொண்டாலே அவர் கட்சிக்கும் அவர் வகிக்கும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக்கும் கௌரவமாகும் என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம், இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குக் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அளித்த பதிலில் பள்ளி நிர்வாகச் செலவினங்களைச் ஈடுகட்ட முடியாத பள்ளிகள் ( sjk பள்ளிகளாக ) முழு அரசாங்கப் பள்ளிகளாக மாற விண்ணப்பிக்கலாம் என்றார். அது ஒரு பொதுப்படையான பதில் என்றாலும் பள்ளிகளை அரசாங்கப் பள்ளிகளாக மாற்றப் பல கட்டுபா1டுகளும் கோட்பாடுகளும் உண்டு என்பதனை அனைவரும் அறிவோம்.
அந்தப் பதிலில் திருத்தி இல்லையென்றால் ம.இ.காவின் சார்பில் உள்ள 2 நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.இ.கா வின் தேசியத் துணைத் தலைவர் சரவணன் மற்றும் உதவித் தலைவரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவராஜ் உடனடியாகக் கல்வி அமைச்சரை இடைமறித்துத் துணைக் கேள்விகளைத் தொடுத்திருக்கலாமே, அவர்கள் ஏன் கேட்கவில்லை?
துணைக் கேள்வி எழுப்பி விளக்கம் பெறத் தவறிய அவர்களைக் கண்டிக்கத் துணிவற்ற விக்னேஸ்வரன், தன்னை இந்தியச் சமுதாயத்தின் போர் வாள் என்பதைவிட தான் அம்னோவின் வால் என்று அறிக்கை விட்டிருக்கலாம். தமிழ்ப்பள்ளிகளுக்கிடையே உள்ள வித்தியாசம் தெரியாதவர்கள் அர்த்தமின்றி வீணே பிதற்றுவது ஏன், வீண் அறிக்கை விடுவதேன் என்று கேட்டார் டாக்டர் சேவியர்.
விக்னேஸ்வரன் அரசியலுக்குப் புதியவர் அல்ல, இவர் 2004 ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இளைஞர் பகுதி தலைவராக, செனட்டராக இருந்தபொழுது தாய்மொழிப் பள்ளிகளின் அமைப்பு குறித்த மலேசியக் கல்வி அமைச்சின் வழிகாட்டிகள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். கடந்த 61 ஆண்டுகளாகப் பாரிசான் ஆட்சியில் இருந்த காலத்தில் பல நூறு தமிழ்ப்பள்ளிகள் காணாது போனது, அது குறித்து வாய் திறந்திருப்பாரா இவர் என கேட்டார் டாக்டர் சேவியர்.
இன்றைக் கல்வி அமைச்சராக இருக்கும் மஸ்லீ மாலிக் புதிதாக எதனையும் அறிவிக்க வில்லை, அதாவது பாரிசான் ஆட்சிக் காலத்தில் அமலில் இருந்த கல்வி மற்றும் பள்ளிகளின் வழிகாட்டிகள் பரிந்துரையையே மீண்டும் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என்றோ, அவை மலாய் பள்ளிகளாக மாற வேண்டும் என்றோ கூறவில்லை, அவர் கூறியதெல்லாம் அவை முழு அரசாங்க உதவி பெறும் SJK பள்ளிகளாக மாற விண்ணப்பிக்க வேண்டும் என்பதே!
நாட்டில் ஏற்கனவே அரசாங்க முழு உதவிபெறும், பல பெரிய பள்ளிகள் உண்டு. நாட்டின் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியும், பல ஆண்டுகள் சிறந்த தேர்ச்சியை அடைந்துவரும் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியும் ஓர் அரசாங்கப்பள்ளி (SKJ) என்பதை அறியாதவர், அப்பள்ளியிருக்கும் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது வெட்கக் கேடு. நாட்டில் 160 தமிழ்ப் பள்ளிகளும், 415 சீனப் பள்ளிகளும் முழு அரசாங்கப் பள்ளிகளாக (SKJ) இருப்பதை அறியாதவரா நாடாளுமன்ற மேலவைத் தலைவர் விக்னேஸ்வரன் என்று கேட்டார் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
அரசாங்கக் கொள்கையைத் திரித்து மக்களிடம் பிரச்சாரம் செய்யும் இவர் நாடாளுமன்ற மேலவை தலைவராக இருக்கத் தகுதியானவரா? ஒரு தற்குறியைப் போல் அறிக்கை விட்டுப் புலனத்தில் குரல் பதிவு செய்துள்ள விக்னேஸ்வரன் ம.இ.கா தலைவராகக்கூட இருக்கத் தகுதியற்றவர் என்பதை அவர் அறிக்கை புலப்படுத்துகிறது என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
நாடாளுமன்றத்தில் உள்ள ம.இ.காவின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரவணன் மற்றும் உதவித் தலைவர் சிவராஜ் மீதும் விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை இல்லை என்றால், தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தனது வீரத்தைக் காட்ட வேண்டும். போர்டிக்சன் போன்ற ம.இ.கா வின் பாரம்பரியத் தொகுதியில் நின்று கூடத் தனது ஆற்றலைக் காட்டியிருக்க வேண்டும்,. நியமனச் செனட்டர் பதிவிகளை வைத்துக் கொண்டு தவறானப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.