ரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்

விமர்சனம் | நாளை தொடங்கவுள்ள பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு, கட்சித் தேர்தல்களுக்கு ஒரு நிறைவைக் கொடுத்துள்ளது. மத்திய நிர்வாகக் குழுவின் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படலாம்.

அஸ்மின் அலிக்கும் எனக்கும் இடையேயான வாக்கெடுப்பில், அஸ்மின் அலி ஏறக்குறைய 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. இது மொத்த வாக்குகளில் 2 விழுக்காட்டிற்கும் குறைவானது (சுமார் 141,000 கட்சி உறுப்பினர்கள்).

அஸ்மின் அலி 51 விழுக்காடு வாக்குகள் பெற்று, கட்சியின் தேசியத் துணைத் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று நான் நினைக்கிறேன், எனக்கு சுமார் 49 விழுக்காடு வாக்குகள் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

நேர்மை மற்றும் தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை ஆகியவைப் பற்றி போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த வாக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய சில பிரச்சினைகள் நடந்துள்ளன, ஒருதலைபட்சமாக நடந்துகொண்ட மத்தியத் தேர்தல் ஆணைய (ஜேபிபி) அதிகாரிகளின் சுதந்திரம் உட்பட, ஆரம்பத்தில் இருந்தே பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அதேபோல் மின்-வாக்கெடுப்பு முறையில் நேர்ந்த பிரச்சனையும், பெரிய பெரிய தொகுதிகளில் எனக்குச் சார்பான வாக்குகள், எப்படி காணாமல் போயின என்று அக்மால் நசீர் (பிகேஆர் புதிய இளைஞர் பிரிவு தலைவர்) முன்னதாக விளக்கப்படுத்தியதுபோல.

‘பென்சியாங்கானில் செல்கோம் ஆன்லைன் துண்டிக்கப்பட்டது’

கோல சிலாங்கூரில் ‘சமிக்ஞை தடை’ (ஜேம்மர்) ஆனதும், பென்சியாங்கானில் செல்கோம் ஆன்லைன் துண்டிக்கப்பட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது, ஜூலாவ்-இல் தரவுகள் அழிக்கப்பட்டு, ‘தேப்லட்டு’களில் ‘பிரேய்’ பயன்படுத்தப்பட்டதுதான். தேர்தல் தினத்தன்று, தேப்லட்டுகளீல் அத்துமீறல் நடந்ததை ஒப்புக்கொண்ட ஜேபிபி, ஜூலாவ் தேர்தல் முடிவுகளை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.

ஆனால் அதன்பிறகு, அத்துமீறல் நடந்தது உண்மை என்றாலும், தரவுகள் பாதிக்கப்படவில்லை என்று அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.

மொத்த வாக்காளர்களில் சுமார் 2,500 அல்லது 2 விழுக்காட்டிற்கும் குறைவான வித்தியாசத்தை, ஜூலாவ்வின் வாக்குகள் (13,000 உறுப்பினர்களைக் கொண்டது) துணைத் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான முடிவை மாற்றியிருக்கக்கூடும்.

மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்த என்னிடம் வலுவான காரணம் உள்ளது. மேலும், ஊடுருவல் நடத்துள்ளதை ஜேபிபி ஒப்புக் கொண்டது, ஜேபிபி தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர், எல்வின் தியோ இதற்காகப் போலிசாரால் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டார்.

இருப்பினும், கட்சியின் போராட்டம் மற்றும் நலன், இவை அனைத்தையும் விட முக்கியமானது என்பதை நான் உணர்ந்துள்ளேன். கட்சியை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்கும் மக்கள் சேவையை மேம்படுத்துவதற்குமான பொறுப்பு நமக்குண்டு.

இவ்விவகாரத்தில், நேர்மையைத் தேடும் முயற்சியில் நாம் இறங்கினால், கட்சி நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்படும், கட்சியில் சர்ச்சைகள் தொடரும், இது நமது உண்மையான அடிப்படை நோக்கங்களுக்கு எதிரானது.

அஸ்மின் அலிக்குத் தோல்வியின் தாக்கம் அதிகமாக இருக்கும், நான் விட்டுக்கொடுப்பதைவிட என்று நான் எண்ணுகிறேன். அவர் ஓர் அமைச்சர், இரண்டு தவணைகள் துணைத் தலைவர் பதவியில் இருந்தவர், முன்னாள் மந்திரி பெசார், ஒரு வேலையற்றவனின் கைகளில் அவரது தோல்வி என்றால், அரசியல் வாழ்க்கையில் இருந்து அவர் உடனடியாகப் பின்வாங்க, அது ஒரு காரணமாக அமையலாம்.

அதனால்தான், அவரது ஆதரவாளர்களுக்கு அவரின் தோல்வியை ஏற்றுகொள்ள கடினமாக உள்ளது, என்னைவிட, என்று நான் நினைக்கிறேன்.

ஜூலாவ்-இல் மறுதேர்தல் நடந்திருந்தால், ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம் 

அவரது வலுவான ஆதரவாளர், வெர்னோன் கெடிட், ஜூலாவ் உறுப்பினர் எண்ணிக்கை குறித்து, எம்ஏசிசி-யில் பலமுறை புகார் செய்து, கட்சி உறுப்பினர்கள் கைதாக வழிவகுத்ததையும் நான் பார்த்தேன்.

ஒருவேளை, ஜூலாவ்வில் மறுதேர்தல் நடந்து (நான் வெற்றிபெற்றிருந்தால்), இவரைப் போன்றவர்கள் கட்சியைச் சங்கங்கள் பதிவிலாகா மற்றும் நீதிமன்றம் வரை இழுத்துச்சென்று விடுவர் என்று நான் நம்புகிறேன்.

கட்சி தேர்தல் பிரச்சனைகள், கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள இவ்வாரக் கடைசிவரை நீடிக்குமானால், அது நமது தலைவர் அன்வார் இப்ராஹிமுக்குச் சுமையாக அமையும்.

கட்சியைக் கையாள முடியாதவர் என்று அவர் குற்றம் சாட்டப்படுவார், கட்சித் தலைமையை ஒழுங்குபடுத்த தெரியாதவர் என்று குறை கூறப்படுவார்.

இக்குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில், சிலர் நாட்டின் 8-வது பிரதமராக அவரது நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவர்.

கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தோடு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சீர்திருத்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. நான் சாதாரண மக்களைச் சிறந்த நிலையில் காண விரும்புகிறேன், ஏனெனில் நான் திரெங்கானுவில், ஓர் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவன்.

2 விழுக்காடு வெற்றி

சீர்திருத்தக் கருத்தியலைத் தூண்டிவிடும் மாற்றத்தை நாம் கொண்டு வந்தால், மக்களின் தலைவிதி நன்றாக இருக்கும் என நான் பெரிதும் நம்புகிறேன். மேலும், நாட்டின் 8-வது பிரதமராக, இந்தச் சீர்திருத்த சிந்தனையைச் செயல்படுத்த சிறந்த நபர் அன்வார் இப்ராஹிம்தான் என்றும் நான் நம்புகிறேன்.

அதனால், அரசியல் பிரிவு மூலம் அழுத்தம் கொடுக்காமல், என் தோல்வியை ஒப்புக்கொள்ள நான் முன்னதாகவே முடிவெடுத்துவிட்டேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தத் தேர்தல் முடிவு தெளிவாக உள்ளது. அஸ்மின் அலிக்கு 51 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன, எனக்கு 2 விழுக்காடு குறைவு. ஆக, இருவேறு பாதைகொண்ட நாங்கள், கட்சியில் சமமான வலிமை பெற்றிருப்பதையும் முக்கியமானவர்கள் என்பதையுமே இது காட்டுகிறது.

2 விழுக்காடு வெற்றி என்பது, அஸ்மின் (அமைச்சர், 8 ஆண்டுகள் துணைத் தலைவர் பதவி, முன்னாள் மந்திரி பெசார் எனும் அவரது நிலைக்கு) சீர்தூக்கி பார்க்க வேண்டிய ஒரு சமிக்ஞை.

அன்வார் இப்ராஹிம், கட்சியின் தலைவர் மற்றும் வருங்கால பிரதமர் எனும் முறையில், கட்சியில் கீழ்நிலை பிரச்சனைகளையும் புகார்களையும் ஆய்வு செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன்.

நேரம், பணம் போன்றவற்றைத் தியாகம் செய்து, எனக்காகப் பிரச்சாரம் செய்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுக்குப் பணம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை, நான் பதவியிலும் இல்லை, ஆனால் நீங்கள் அனைவரும் இறுதிவரை எனக்காக விசுவாசமாகப் பணியாற்றினீர்கள்.

பிகேஆர் உறுப்பினர்களின் கூட்டுறவுச் சங்கம்

இந்த நான்கு மாதப் பிரச்சாரத்தின் போது, நான் பல இளைஞர்கள், தாய்மார்கள் மற்றும் ஏழை மக்களைச் சந்தித்தேன்.

மலாய், சீன, இந்திய நண்பர்கள், சபா, சரவாக் உட்புறப் பகுதிகளைச் சேர்ந்த கடாசான், டூசுன், முரூட் இனத்தைச் சேர்ந்த நண்பர்கள் அனைவரும் என்னை அன்புடன் வரவேற்றனர். நான் உங்கள் நட்பை மதிக்கிறேன், உங்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

வெளியே இருக்கும் நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் போல, நானும் தற்போது   பிகேஆரின் ஒரு சாதாரண உறுப்பினராக இருக்கிறேன். நமது கட்சியின் நடவடிக்கைகள் சிறப்பாக தொடர, நான் அடிமட்டத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவேன்.

கட்சியின் போராட்டத்தில் இதுவரை எந்தவொரு இலாபமும் பெறாத, பெரும்பான்மை பிகேஆர் உறுப்பினர்களின் பொருளாதாரத்தை உயர்த்த, நான் ஒரு கூட்டுறவு சங்கத்தை உருவாக்க பணியாற்றவுள்ளேன்.

அன்வார் இப்ராஹிம் தலைமையில், மலேசியர்களுக்கான பிகேஆர் போராட்டத்திற்கு நான் தொடர்ந்து விசுவாசமாக இருப்பேன்.

பிகேஆர் கட்சியின் புதியத் தலைவராக அவரை நாம் வரவேற்போம், நாளை தேசிய மாநாட்டில் சந்திப்போம்.

எழுத்து : ரஃபிசி ரம்லி, பிகேஆர் தேர்தல் துணைத் தலைவர் வேட்பாளர், பாண்டான் நாடாளுமன்ற முன்னாள் எம்பி

(தமிழாக்கம் செய்யப்பட்டது)