‘என் மகள் எங்கே?’, ஹராப்பானிடமும் ஐஜிபி-இடமும் இந்திராகாந்தி கேள்வி

எம் இந்திரா காந்தி, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தனது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகள் பிரசன்னா டிக்ஸாவைத் தேடும் பணிகளின் தற்போதைய நிலை என்னவென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளார்.

தனது இளைய மகளை இன்றுவரைக் காண முடியவில்லை என்ற இந்திரா காந்தி, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மற்றும் தலைமை காவல்துறை அதிகாரி, ஃபூஸி ஹருண் ஆகியோரிடமிருந்து விளக்கம் கேட்பதாகத் தெரிவித்தார்.

“அவர்கள் எங்கே? பிரசன்னா உயிருடன் இருக்கிறாளா? ஆரோக்கியமாக இருக்கிறாளா? அவளுடைய அம்மா என்ற வகையில், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, ஏன்? காரணம் அதிகாரிகள் அதைப் பற்றி என்னிடம் இதுவரை எதுவும் சொல்லவில்லை,” என்று இந்திரா கூறினார்.

அரசாங்கத்திற்கும் ஐ.ஜி.பிக்கும் எழுதிய ஒரு திறந்த கடிதத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று மலாய் மெயில் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2009-ம் ஆண்டு, இந்திராவின் முன்னாள் கணவர் இஸ்லாம் மதத்தைத் தழுவி, முகமட் ரிட்டுவான் அப்துல்லா எனத் தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

அதன்பின்னர், இந்திரா தனது மகள் பிரசன்னாவை, ஒரு வயது ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது, நீதிமன்றத்தில் ஒருமுறை மட்டுமே பார்த்திருக்கிறார்.

2014-ல், ஈப்போ உயர் நீதிமன்றம், ரிட்டுவானைக் கைது செய்ய உத்தரவு ஆணை ஒன்றை வெளியிட்டது, அப்போது போலிஸ் அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஃபூஸி கூறியிருந்தார்.

இந்திராவின் வழக்குரைஞரும் மனிதவள அமைச்சருமான எம் குலசேகரன், தேடுதல் முயற்சிகளை விரைவுபடுத்த போலிசாரிடம் கேட்கவுள்ளதாக முன்னர் கூறியிருந்தார்.

ஆனால், இதுவரை தேடும் பணிகளில் எந்தவொரு முன்னேற்றமும் தென்படவில்லை.

தனது மற்ற இரண்டு குழந்தைகளையும் பாதுகாக்கும் உரிமை இந்திராவுக்கு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம், அவரது மூன்று குழந்தைகளின் மதமாற்றத்தையும் ஃபெடரல் நீதிமன்றம் இரத்து செய்திருந்தபோதும், பிரசன்னா ஒரு முஸ்லிம் பெண்ணாகவே இருக்கலாம் என்று இந்திரா பகிரங்கமாகக் கூறினார்.

இருப்பினும், தற்போது தனது மகளின் நிலையைப் பற்றி தெரிந்துகொள்ளவே விரும்புவதாகத் தெரிவித்தார்.

“நான் என் மகளை நேசிக்கிறேன். நான் எவ்வளவு காலம் உயிர் வாழ்வேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் சுவாசிக்கும் வரை, ஒவ்வொரு நாளும் பிரசன்னாவின் பெயரை நான் குறிப்பிடுவேன், அவள் என்னுடனும் அவளது இரண்டு உடன்பிறப்புகளுடனும் மீண்டும் இணையும் வரை, நான் அவளைப் பற்றி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன்.

“என் மகள் என்னிடம் திரும்பிவரும் நாள்தான், எனக்கு புதிய மலேசியா.

“ஆக, ஐஜிபி, ஹராப்பான் அரசாங்கம் – இன்னும் எத்தனை நாள்?” என அத்திறந்த மடலில் இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.