ரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும், பிகேஆர் தேர்தலில் அல்ல

பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்திற்கு, பிகேஆர் உள்விவகாரங்கள் பற்றி விவாதிப்பதை விட, முக்கியமான வேறு பல விஷயங்கள் இருக்கின்றன என்று, பிகேஆர் துணைத் தலைவர் போட்டியில் தோல்வி கண்ட ரஃபிசி ரம்லி கூறியுள்ளார்.

“நாங்கள் ஒருவருக்கொருவர் மீது மரியாதை வைத்துள்ளோம், ஆனால் மற்ற கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம்,” என்று இன்று ஷா ஆலாமில் நடைபெறும் பிகேஆர் 13-வது தேசிய மாநாட்டில், ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பெர்சத்து தலைமைச் செயலாளர் மர்சூக்கி யஹ்யா, பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றக் கூட்டத்தில், பிகேஆர் தேர்தல்களில் நடந்ததாகக் கூறப்படும் பண அரசியலைப் பற்றி தனது கட்சி கேள்வி எழுப்பும் என்று அண்மையில் கூறியிருந்தார்.

அத்தகையக் குற்றச்சாட்டுகள், ஹராப்பான் அரசாங்கத்தின் நிர்வாகத்தைப் பாதிக்கக்கூடும் என்று துணை வெளியுறவு அமைச்சருமான அவர் தெரிவித்திருந்தார்.

அக்குற்றச்சாட்டு குறித்து, தலைமை மன்றக் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று கூறிய ரஃபிசி, ஆனால் அதைவிட முக்கியம், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கலந்துபேசுவது என்றார்.

“ஹராப்பான் அதன் செயல்திறன்களில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறிய அவர், அக்கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதைப் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.

“பண அரசியல் எந்தவொரு கட்சிக்கும் ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது, அதைப்போலவே, 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின், முதன் முதலில் கட்சி தேர்தலை நடத்திய, பிகேஆரிலும் நடந்தது.

“அமானா, பெர்சத்து, டிஏபி கட்சி தேர்தல்களும் நடக்கட்டும், பார்க்கலாம்,” என்றார் அவர்.

பிகேஆர் தேர்தலின் போது நடந்த பண அரசியல் குற்றச்சாட்டுகளை, கட்சி விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டுசெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.