பாஸும் அம்னோவும் ஒன்றிணைய வேண்டும். அவ்விரு கட்சிகளும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த பேரணி ஒன்றில் உரையாற்றிய அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
“அன்புள்ள (பாஸ் தலைவர்) அப்துல் ஹாடி ஆவாங் அவர்களே, என்னுடைய தலைமைத்துவத்தில், வாருங்கள் ஒன்றிணைவோம்.
“நம் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து இஸ்லாத்தின் பெயரால், மலாய்காரர் பெயரால், மலேசியா, பூமிபுத்ரா பெயரால் ஒன்று சேர்வோம்”, என நேற்றிரவு பாசிர் சாலாக்கில் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலத்தில் அம்னோவும் பாஸும் பகைமை கொண்டிருந்தது தவறு. ஒரு “தாத்தா”தான் அதற்குக் காரணம் என்றாரவர்.
“அம்னோவின் 61 ஆண்டுக்கால ஆட்சியில் இந்தத் தாத்தா 22 ஆண்டுகள் ஆட்சிப் பீடத்தில் இருந்தார்.
“பாஸையும் டிஏபியையும் மற்றக் கட்சிகளையும் வெறுக்கக் கற்றுத் தந்தார். இப்போது அவர்கள் ஒருவர் மற்றவரைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொள்கிறார்கள். 22ஆண்டுகளாக எங்களுக்குப் பொய்யுரைக்கப்பட்டு வந்துள்ளது”, என்றார்.
22 ஆண்டுகள் பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் முகம்மட்டை மனதில் வைத்துத்தான் ஜாஹிட் அவ்வாறு பேசினார் என்பது தெரிந்ததே.
ஜாஹிட் இவ்வளவு பேசியும் அவருக்குப் பின் பேசிய பாஸ் தலைவர் ஹாடி, இணைப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கவே இல்லை. அதற்குப் பதிலாக எல்லா வகை இனப் பாகுபாடுகளுக்கும் எதிரான அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்)த்தை அம்னோவும் பாஸும் ஆட்சேபிப்பதை வலியுறுத்தினார்.
முன்னதாக இரு கட்சிகளும் ஐசெர்ட்- எதிர்ப்புக் கூட்டமொன்றை டிசம்பர் 8-இல் கோலாலும்பூரில் நடத்தப் போவதாக அறிவித்திருந்தன.