பிகேஆர் மாநாடு | பிகேஆர் துணைத் தலைவர் பதவி, தனக்குப் பெரும் சவாலாக இருந்தது இது முதல் தடவை அல்ல என்று அஸ்மின் அலி கூறியுள்ளார்.
முந்தையத் தேர்தல்களை நினைவுகூர்ந்த அவர், சவால்களை அமைதியாக எதிர்கொண்டதே, இன்று மீண்டும் அப்பதவியைத் தற்காத்து கொள்வதற்குக் காரணமாக அமைந்தது என்றார்.
“எனக்கு இந்தப் பதவி சுலபமாகக் கிடைத்ததல்ல, கடந்த காலங்களில் இருந்தே நான் இதற்குப் போராட வேண்டியிருந்தது. முதலில் ஸைட் இப்ராஹிம் எனக்குச் சவாலாக இருந்தார், பிறகு காலிட் இப்ராஹிம்,” என்று இன்று, ஷா ஆலாமில் நடந்த, பிகேஆர் 13-வது தேசிய மாநாட்டில் பேசிய அவர் தெரிவித்தார்.
இம்முறை, ரஃபிசி தனக்குச் சவாலாக இல்லை என்று கூறிய அஸ்மின், அந்த முன்னாள் பாண்டான் எம்பி, ‘கட்சிக்குச் சேவையாற்றி இருக்கிறார்’ என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
“பிரச்சனை இல்லை, நான் அமைதியாகவே இருக்கிறேன். அன்வார் என்னை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். நான் அவரிடம் கேட்டேன், ‘எப்படி அமைதியாக இருப்பது, டத்தோ ஶ்ரீ, நாலாபக்கமும் எனக்கு தாக்குதல் நடக்கிறது’ என்றேன்.
“அமைதி காப்பவர்கள், எப்போதும் வெற்றி அடைவார்கள்,” என அஸ்மின் மேலும் சொன்னார்.
“இதற்கு முன்னர், அன்வார், ஷேட் உசேன் அலியுடன் போட்டியிட வேண்டாம், அவர் என் குரு என்று கூறினார். நானும் அதற்கு இணங்கினேன், காரணம் நான் அன்வாரின் விசுவாசி, அதுமட்டுமல்ல, ஷேட் உசேன் அலியை நான் மதிக்கிறேன், எனவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டேன்.
“என்னால் விலகிக்கொள்ள முடியுமென்றால்…..,” என்று கூறிய அவர், தனது பார்வையை ரஃபிசியை நோக்கித் திருப்பி, புன்னகைத்தார். அந்நேரம் அனைவரது கவனமும் ரஃபிசியின் பக்கம் திரும்பியது.
கட்சி உறுப்பினர்களையும், தன்னைப் போலவே அமைதி காக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார், இது சாதாரண மற்றும் ஜனநாயகத்தில் ஒரு பொதுவான நடைமுறை என்று அவர் கூறினார்.