முன்னாள் பிரதமர் நஜிப் துன் இராசாக், 1மலேசியா பால் திட்டத்தில் (பிஎஸ்1எம்), 2017-ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து பானங்களும், வெற்றிகரமாக 7,000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக விசாரணையின் முடிவுகள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பிஎஸ்1எம், பிஎன் ஆட்சியின் போது காணாமல் போனது என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் குற்றஞ்சாட்டி இருந்தார்.
“ஆனால், அவர் (மஸ்லி) இன்னும் நிறுத்தவில்லை, இப்போது பிஎஸ்1எம் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் காணாமல் போய்விட்டது என்று குற்றஞ்சாட்டுகிறார்.
“2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான அனைத்து பிஎஸ்1எம் பானங்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன என விசாரணையில் தெரியவந்துள்ளது.
“துரதிஸ்டவசமாக, இவ்வாண்டு, பக்காத்தான் ஹராப்பான், ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகுதான் இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது, காரணம், புதிய அரசாங்கம் இந்த இலவசப் பால் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை,” என்று நஜிப் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
முன்னதாக, 1மலேசியா பால் திட்டத்தில் மோசடிகள் நிரம்பியுள்ளது, அது தோல்வியுற்ற ஒரு திட்டம் என்று, டாக்டர் மஸ்லி கூறியதற்கு மறுப்பு தெரிவித்து, மிங்குவான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.
அச்செய்தியின் படி, கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை, முந்தைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 5 நிறுவனங்களால், சம்பந்தப்பட்ட 7,000 பள்ளிகளுக்குப் பானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதற்கான ஏற்புக் கடிதம், பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் (எஸ்.ஏ.பி), இன்வோய்ஸ் போன்ற அனைத்து ஆவணங்களும், முழுமையாகவும் முறையாகவும் உள்ளதாக ஆதாரங்கள் கூறியுள்ளன.
“பால் அனுப்பப்படவில்லை என்றால், பள்ளியில் துணைத் தலைமையாசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், எப்படி எஸ்.ஏ.பி.-இல் கையொப்பமிட்டனர்? ஆக, எஸ்.ஏ.பி.-இல் கையொப்பமிட்டவர்களிடமும் விசாரணை செய்ய வேண்டும்,” என அவர் மேற்கோளிட்டுள்ளார்.
நவம்பர் 8-ம் தேதி, கடந்தாண்டு பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட, 2018-க்கான பிஎஸ்1எம் திட்டம் என்னவானது என்று தெரியவில்லை என மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
தவறு ஹராப்பான் அரசாங்கத்தின் மீது, ஆனால் கல்வி அமைச்சர் தன்னையும் பிஎன் அரசாங்கத்தையும் குற்றம் சொல்கிறார் என்று நஜிப் கூறியிருந்தார்.
“ஆட்சி அமைத்து 6 மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பிஎன் அரசாங்கத்தையே குறை சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்?
“நமது கல்வியமைச்சர், நம் இளையர்களுக்குப் பொய் சொல்லக் கற்றுத் தருகிறாரா? விசாரணை செய்வதற்கு முன்னர், குற்றச்சாட்ட விரும்புகிறாரா?” என்று நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார்.