செனட் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான அறையைப் பயன்படுத்தியபோது பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுவது குறித்து போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சட்டம் 1959-இன்கீழ் விசாரணை நடப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் மஸ்லான் மன்சூர் ஹரியான் மெட்ரோவிடம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், விக்னேஸ்வரன் விமான நிலயத்தில் விஐபி அறையைப் பயன்படுத்தியபோது தெரிந்தே விதிகளை மீறி நடந்து கொண்டிருக்கிறார் எனக் குற்றஞ்சாட்டினார்.
விக்னேஸ்வரன் காலில் சிலிப்பர் அணிந்திருப்பதையும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்துவதையும் காண்பிக்கும் சிசிடிவி காணொளி ஒன்றையும் அவர் செய்தியாளர்களுக்குப் போட்டுக் காண்பித்தார்.
அனுமதி அட்டையின்றி பிரமுகர் அறைக்குள் நுழைந்த விக்னேஸ்வரன் விமான நிலையப் பணியாளர்களிடம் குரலை உயர்த்திப் பேசியதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
குற்றச்சாட்டை மறுத்த மஇகா தலைவருமான விக்னேஸ்வரன் அமைச்சர் தம்மீது அநியாயமாக பழி போடுவதாகவும் தமக்கு விளக்கமளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.