கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான(விஐபி) பாதையைப் பயன்படுத்திய டயிம் சைனுடினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் உண்டா என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக்குக்கு மஇகா தலைவர் ஒருவர் சவால் விடுத்துள்ளார்.
“டயிமின் குற்றம் (விதிமுறைகளை மீறியது) பெரிது. பிரதமரின் பிரதிநிதியாக செயல்பட்டபோது அவர் காலில் சிலிப்பர் அணிந்துள்ளார். அவரை ஏன் கைது செய்யவில்லை? ஏன் போலீசில் புகார் செய்யவில்லை?”, எனக் கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் எஸ்.ராஜா வினவினார்.
பக்கத்தான் ஹரப்பான் சார்ந்தவர்களாக இருந்தால் விட்டு விடுங்கள் எதிரணித் தலைவர்களாக இருந்தால் விதிமுறைகளும் நெறிமுறைகளும் பாயட்டும் என்று அமைச்சர் கேஎல்ஐஏ அதிகாரிகளுக்குப் பணித்திருப்பார்போல் தோன்றுகிறது என ராஜா கூறினார்.
சனிக்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய போக்குவரத்து அமைச்சர் மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விமான நிலயத்தில் விஐபி அறையைப் பயன்படுத்தியபோது சிவப்பு-காலர் சட்டையும் நீண்ட காற்சட்டையும் காலில் சிலிப்பரும் அணிந்து விதிகளை மீறி நடந்து கொண்டிருக்கிறார் எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் காலில் காயம் பட்டிருந்தது அதனால்தான் சிலிப்பர் அணிந்திருந்ததாகக் கூறினார். தம்முடைய இந்த விளக்கத்தைக் கேட்க லோக் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
லோக் சிறுபிள்ளைத்தனமாக நடந்துக்கொள்கிறார் என ராஜா மலேசியாகினியிடம் கூறினார
”முதலில் விக்னேஸ்வரன் கேஎல்ஐஏ விதிமுறைகளை மீறி விட்டார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இப்போது போலீஸ் விசாரணை என்கிறார். இது லோக் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பதைக் காண்பிக்கிறது.
“அமைச்சராகிய அவர் முதலில் குற்றஞ்சாட்டி விட்டுப் பிறகு போலீசை விசாரணை செய்யுமாறு கூறக் கூடாது”, என்றார்.
போலீஸ் விசாரணையில் விக்னேஸ்வரன் தவறு ஏதும் செய்யவில்லை என்று தெரிய வந்தால் லோக் மன்னிப்புக் கேட்பரா என்றும் ராஜா வினவினார்.