வேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும் அம்னோ

நாடாளுமன்றம் | இன்று, பாஸ் மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ‘அனைத்துத் தரப்பு இனவாதப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சர்வதேச ஒப்பந்தம் (ஐ.சி.இ.ஆர்.டி.) தொடர்பில், பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தியின் நிலைப்பாட்டைத் தாக்கிப் பேசினர்.

2019 சட்ட வரைவு விவாதத்தின் போது, ச்சே அப்துல்லா மாட் நாவி (பாஸ்-தும்பாட்), “இனவாதம்!” என வேதமூர்த்தியை நோக்கிக் கூக்குரலிட்டார்.

அவரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்பி-க்களும் கூச்சல் போட்டனர்.

முந்தையப் பாரிசான் நேசனல் அரசாங்கம், மலேசிய இந்தியர்களுக்கு எதிராக பாகுபாடுகளைக் காட்டியது என்ற வேதமூர்த்தியின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவர் மீது எம்பிக்கள் இந்த வாய் தாக்குதலை நடத்தினர்.

மத்திய அரசியலமைப்பின் கீழ், சட்டப்பிரிவு 153-ஐ திருத்த அல்லது அகற்றுவதற்கான தேவை ஏற்பட்டால், அரசாங்கம் ஐ.சி.இ.ஆர்.டி. அங்கீகரிக்காது என வேதமூர்த்தி முன்னர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தற்போது அட்டர்னி ஜெனரல்ஸ் சேம்பர்ஸ்-இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தகவல்களுக்குப் பின்னர்தான் எந்த முடிவும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“இந்த விஷயம் ஏ.ஜி.-யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது….. சட்டப்பிரிவு 153-ஐ திருத்த வேண்டும் என்றால், அரசாங்கம் ஐ.சி.இ.ஆர்.டி. அங்கீகரிக்காது,” என்று, 2019 சட்ட வரைவு விவாதத்தின் போது உரையாற்றிய வேதமூர்த்தி கூறினார்.