சீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா?, உடனே அகற்ற சிலாங்கூர் சுல்தான் உத்தரவு

 

சிலாங்கூர், ஷா அலாமிலுள்ள சாலைகளில் இரு மொழிகளில் எழுதப்பாட்டிருக்கும் சாலை வழிகாட்டி பலகைகளை மாற்றி தேசிய மொழியில் எழுதப்பட்டவை வைக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு சிலாங்கூர் மாநில அரசுக்கு சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பானி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 19 ஆம் தேதியிடப்பட்டுள்ள இக்கடிதம் இந்த உத்தரவு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அது சுல்தானின் 73-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு முன்னதாக செய்து முடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் டிசம்பர் 11-இல் நடைபெறும்.

ஷா அலாமில் சீனமொழியில் எழுதப்பட்டிருக்கும் அனைத்து சாலை வழிகாட்டி பலகைகளும் அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக ஒரே ஒரு மொழியில் மட்டும், அதாவது பகசா மலாயுவில் மட்டும், எழுதப்பட்டுள்ள சாலை வழிகாட்டி பலகைகள் பொருத்தப்பட வேண்டும் என்று சுல்தான் உத்தரவிட்டிருப்பதாக அக்கடிதம் கூறுகிறது.

இந்த உத்தரவு அடங்கியதாக கூறப்படும் கடிதத்தை அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா டிவிட் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சுல்தான் எடுத்துள்ள கடுமையான நிலைப்பாட்டிற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மலாய் ஆட்சியாளர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் மூசாவின் டிவிட் கூறுகிறது.