ஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார், அடுத்து இரசாக் அழைக்கப்படலாம்

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி), நஜிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது வாங்கப்பட்ட இரண்டு ஸ்கோர்ப்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

இன்று காலை, புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு, நஜிப் அழைக்கப்பட்டதற்கு அதுதான் காரணம் என்று மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.

“அந்த வழக்கு மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத எம்ஏசிசி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு உதவ, வேறு சில நபர்களும் அழைக்கப்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். அவர்களுள், நஜிப்பின் முன்னாள் ஆலோசகர் இரசாக் பகிண்டாவும் ஒருவர்.

கேடி துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் கேடி துன் ரசாக் என, அந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் மறுபெயரிடப்பட்டன. கேடி துங்கு அப்துல் ரஹ்மான், செப்டம்பர் 2009-லும், கேடி துன் ரசாக் ஜூலை 2010-லும் மலேசியாவை வந்தடைந்தன.

முன்னதாக, சரவாக் பள்ளிகளில், சூரிய மின்சக்தி நிறுவுதலில் நடந்த ஊழல் தொடர்பாக, இன்று காலை 9.30 மணிக்கு, எம்ஏசிசி தலைமையகத்திற்கு நஜிப் வந்ததாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மங்கோலிய மாடல் அழகி அல்தான்தூயா ஷாரிபு, இந்த ஸ்கோர்ப்பீன் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தார்.

முன்னதாக, அல்தாந்தூயாவுடன் தொடர்பு உண்டு என்பதை அப்துல் ரசாக் ஒப்புக்கொண்டார். ஆனால், அல்தாந்துயாவின் படுகொலையில் சம்பந்தம் இல்லை என, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் தனக்குத் தொடர்பு இல்லையென, நஜிப் தொடர்ச்சியாக மறுத்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 2018-ல், முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி, கோபால் ஸ்ரீ ராம் ஸ்கோர்ப்பீன் பரிவர்த்தனை விசாரணைகளை மீண்டும் திறக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.