இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கு வகை செய்யும் ஐசெர்ட் எனப்படும் அனைத்துலக ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக நடத்தப்படவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பவர்கள் இன மற்றும் சமய நெருக்கடி நிலையைத் தூண்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா வலியுறுத்தியுள்ளார்.
“இது ஒரு ஜனநாயக நாடு, நீங்கள் அரசாங்கத்தோடு ஒத்துப் போக வேண்டியதில்லை. ஆனால் எனது ஆலோசனை இது: மலேசியர்கள் என்ற முறையில் நாம் உணர்ச்சிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனையை ஓர் இன மற்றும் சமயப் பிரச்சனையாக்கிவிட வேண்டாம்.
“நீங்கள் ஒன்றுகூட வேண்டும் என்றால், செய்யுங்கள். ஆனால் உணர்வுகளைப் பயன்படுத்தி எந்த ஓர் இனத்தையோ, சமயத்தையோ அச்சுறுத்தாதீர்”, என்று ஊடகத்தினரிடம் இன்று புத்ரா ஜெயாவில் அவர் கூறினார்.
பாஸ் இளைஞர் பிரிவு, நெகிரி செம்பிலான் அம்னோ புத்ரி மற்றும் இளைஞர் பிரிவுகள் ஐசெர்ட்டை அங்கீகரிக்க அரசாங்கம் கொண்டுள்ள நோக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை, (நவம்பர் 23) பிற்பகல் மணி 2.00 அளவில், சிறம்பான் மாநில மசூதியில் கூட்டம் நடத்தவிருக்கின்றனர்.
இது குறித்து போலீசாருக்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை. சட்டப்படி கூட்டம் நடத்தப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாக ஏற்பாட்டாளர்கள் போலீஸுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பாஸும் அம்னோவும் இன்னொரு ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணியை கோலாலம்பூரில் டிசம்பர் 8-இல் நடத்தவிருக்கின்றன.
தேவைப்பட்டால் ஐசெர்ட் குறித்து இரண்டாவது வட்டமேசை விவாதம் நடத்த தாம் தயார் என்று முஜாஹிட் கூறினார்.
நாம் மக்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றிருக்கிறோம். சிலர் பாரபட்சமின்றி பேசினர்; சிலர் கால அட்டவணை வேண்டும் என்றனர்; சிலர் எதிர்த்தனர். அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம் என்றாரவர்.
கடந்த செப்டெம்பரில் ஐநாவில் உரையாற்றிய பிரதமர் மகாதிர் எஞ்சியிருக்கும் ஐநா அனைத்துலக ஒப்பந்தங்களை முழுமையான மற்றும் ஆழமான ஆலோசனைக்குப் பின்னர் மலேசியா அங்கீகரிக்கும் என்று கூறினார்.
பின்னர், ஐசெர்ட் ஒப்பந்தத்தை 2019-இல் மலேசியா அங்கீகரிக்கும் எண்ணம் கொண்டிருப்பதாக அமைச்சர் பி. வேதமூர்த்தி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பல அரசியல்வாதிகளும் அரசு சார்பற்ற அமைப்புகளும் ஐசெர்ட் அங்கீகரிப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றன.