ஐசெர்ட் எனப்படும் அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் அழிக்க வகை செய்யும் ஐநாவின் அனைத்துலக ஒப்பந்தத்தை அங்கீகரிக்க மலேசிய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியதில்லை, ஏனென்றால் அவற்றில் ஒன்றுக்கொன்று முரண்பாடான எதுவும் இல்லை என்று இரண்டு சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஐசெர்ட்டை அமல்படுத்துவது “கிட்டத்தட்ட சாத்தியமில்லை”, ஏனென்றால் அதற்கு பெடரல் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருக்கும் என்று நவம்பர் 18 இல் பிரதமர் மகாதிர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அரசமைப்புச் சட்ட பிரிவு 153 ஐசெர்ட்டின் நோக்கங்களுக்கு முரண்பாடானதாக இல்லை. ஆகவே அரசமைப்ப்புச் சட்டத் திருத்தங்கள் தேவையில்லை என்று என். சுரேந்திரன் கூறுகிறார்.
சட்டப் பிரிவு 153 இல் கூறப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகள் போன்ற கொள்கைகளை ஐசெர்ட்டே அங்கீகரித்துள்ளது என்று கூறிய சுரேந்திரன், சட்டப் பிரிவு 153 இன் நோக்கங்களை அடைவதற்கு மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று சட்டப் பிரிவு 153(4) இல் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தச் சட்டப் பிரிவுகளில் சமநிலையும் பாதுகாப்பும் இருக்கின்றன என்று அவர் மலேசியாகினியிடம் நேற்று கூறினார்.
சட்டப் பிரிவு 153-இன் அமலாக்கத்தைக் கோணலாக்கி அதன் வரம்புக்கு அப்பால் சென்றது முந்தைய பிஎன் அரசாங்கம். அதன் விளைவுதான் இச்சட்டம் பற்றிய தற்போதைய தவறான கருத்துகள்.
சட்டப் பிரிவு 153 இல் கூறப்பட்டிருப்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதின் விளைவாக இது பற்றிய சர்ச்சையில் பெரும் பகுதி எழுந்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடும் மற்றும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் அரசாங்கத்தைத் தாக்குகின்றன என்று சுரேந்திரன் மேலும் கூறினார்.
ஐசெர்ட்டை அங்கீகரிப்பதால் சட்டப் பிரிவு 153-இன் மீது ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றிய அச்சத்தை அகற்றுவதற்கு ஒரு சாதாரணத் தீர்வு இருக்கிறது. இந்தச் சட்டப் பிரிவைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மலேசியா ஐசெர்ட் ஒப்பந்தத்தில் நிறுத்தி வைத்திருத்தல் (Reservation) என்ற கூறை சேர்த்துக்கொள்வதாகும்.
இப்படி ஒரு தீர்வு இருக்கிறது. அதை வேண்டுமென்றே புறக்கணித்து விட்டு, ஐசெர்ட்டுக்கு எதிராக கூச்சலிடுவது நேர்மையற்றது, அரசியல் நோக்கம் கொண்டது என்று சுரேந்திரன் மேலும் கூறினார்.
ஐசெர்ட்டை ஏற்றுக்கொள்வதற்கு பெடரல் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய தேவை இல்லை என்று சட்ட விரிவுரையாளர் அஸ்மி ஷரோமும் கூறினார்.
ஐசெர்ட்டுக்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தில் எதுவுமே இல்லை என்று அஸ்மி மேலும் கூறினார்.