நஜிப்: ஐசெர்ட்டை இரண்டு தடவை ஆராய்ந்தோம், அது நமக்கு ஒத்துவராது என முடிவு செய்தோம்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முந்தைய பிஎன் அரசாங்கம் எல்லாவகை இனப்பாடுபாடுகளையும் ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்)த்தில் கையெழுத்திடுவது குறித்து இரண்டு தடவை ஆராய்ந்து பார்த்தது என்றார்.

ஆனால், பிரதமர்துறையில் இருந்த தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்புத் துறை 2011-இல் அமைத்த ஐசெர்ட் நுட்பக் குழு, ஐசெர்ட் மலேசிய சமுதாய ஒப்பந்தத்துடன் ஒத்துப்போகாது என்று முடிவு செய்தது.

ஐசெர்ட்டில் கையெழுத்திடலாமா என்று 2015-இல் இரண்டாவது தடவையாகவும் ஆராயப்பட்டது.

“அப்பரிசீலனைகளுக்குப் பின்னர், கூட்டரசு அரசமைப்புக்கும் சமுதாய ஒப்பந்ததுக்கும் எதிரான ஐசெர்ட்டில் கையெழுத்திடுவதில்லை என்ற நிலைப்பாட்டை பிஎன் அரசாங்கம் எடுத்தது.

“ஐசெர்ட்டில் கையெழுத்திடுவது சரியாக இருக்காது , அதற்குக் காலம் இன்னும் கனியவில்லை என்ற முடிவுக்கு வந்தது.

“எனவே, பிஎன் அரசாங்கம் ஐசெர்ட்டில் கையெழுத்திட முடிவு செய்யவும் இல்லை செய்வோம் என்று அறிவிக்கவும் இல்லை”, என நஜிப் நேற்றிரவு முகநூலில் பதிவிட்டிருந்தார்.