நஜிப்: ஹரப்பான் எம்பிகளை வளைத்துப் போடுமாறு அம்னோவுக்கு உத்தரவிடவில்லை

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்கத்தான் ஹரப்பான் எம்பிகளுடன் சேர்ந்து அம்னோ கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதில் தமக்குச் சம்பந்தமில்லை என்றார்.

“மற்றவர்கள் அதைச் செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அன்றிரவு அப்படி எதையும் செய்ய நான் பணிக்கவில்லை”, என்றார்.

மே 9 தேர்தலில் பிஎன் தோல்வியைத் தொடர்ந்து பக்கத்தான் ஹரப்பானின் மலாய்- முஸ்லிம் எம்பிகளை அவர்களின் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடந்ததாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பது குறித்துக் கேட்டதற்கு நஜிப் அவ்வாறு பதிலளித்தார்.

புதிய எதிரணியில் அம்னோ, பாஸ் முஸ்லிம் எம்பிகள்தாம் அதிகம் என்பதால் ஹரப்பான் கூட்டணியில் உள்ள முஸ்லிம் எம்பிகளையும் சேர்த்துக் கொண்டு மலாய்- முஸ்லிம் அரசாங்கம் அமைப்பதுதான் அவர்களின் திட்டம் என்றும் மகாதிர், மெக்கொங் ரிவ்யு சஞ்சிகைக்கு வழ்ஙகிய நேர்காணல் ஒன்றில் கூறினார்..

அதனால்தான் அன்றிரவு ஹரப்பான் வெற்றியை அறிவிப்பது தாமதமானது என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே, ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடினும் தனக்குத் தெரிந்து மகாதிர் கூறியதுபோல் எதுவும் நடக்கவில்லை என்றார்.

“பிரதமர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.அன்றிரவு நானும் நஜிப்பின் இல்லத்தில்தான் இருந்தேன்.

“நஜிப்போ, (அப்போது அம்னோ துணைத் தலைவராக இருந்த) அஹமட் ஜாஹிட் ஹமிடியோ, ஹிஷாமுடின் உசேனோ, தெங்கு அட்னான் தெங்கு மன்சூரோ, நானோ எம்பிகளை (அம்னோவில் சேர்க்க) முயற்சி மேற்கொள்ளவில்லை.

“நஜிப் தெளிவாக சொன்னார் நாம் தோல்வியை ஏற்க வேண்டும் என்று. பிஎன் தேர்தல் முடிவுகளை ஏற்பதாக மறுநாள் அறிவிக்கப் போவதாகவும் பிரதமராக யாரை நியமிப்பது என்ற முடிவைப் பேரரசரிடம் விட்டு விடுவதாகவும் அவர் கூறினார்”, என கைரி தெரிவித்தார்.

மகாதிர் பிஎன்மீது அவதூறு கூற முயல்கிறாரா என்று வினவியதற்கு கைரி கருத்துரைக்க மறுத்தார்.

”பிரதமர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. நான் பார்த்ததையும் கேட்டதையும் வைத்துத்தான் எதுவும் கூற முடியும். நஜிப் வீட்டுக்கு வெளியில் யார் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது”, என்றார்.