பிஎஸ்எம் : ஐசெர்ட்டை மறந்துவிட்டு, தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கையாளுங்கள்

அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் (ஐசெர்ட்) அகற்றுவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னர், நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் கவலைகளைத் தீர்க்க அரசாங்கம் ஆவண செய்ய வேண்டுமென, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தலைவர் டாக்டர் நாசிர் ஹசிம் கூறியிருக்கிறார்.

“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு, உண்மையிலேயே மிகப்பெரிய சவாலாக இருப்பது, ஐசெர்ட் கையெழுத்திடப்பட்டால், தங்கள் சிறப்புரிமைகள் பறிபோகும் எனும், பெரும்பான்மை மலாய்க்காரர்களிடையே உள்ள கவலைக்குத் தீர்வு காண்பதுதான் என்று பி.எஸ்.எம். நினைக்கிறது.

“அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள், ஐசெர்ட் தொடர்பான பிரச்சனைகளை எழுப்புவது, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே என்று கருதுவது தவறானது.

“அதுமட்டுமல்லாது, விவசாயிகள், சிறு தோட்ட விவசாயிகள், சிறு வியாபாரிகள், கீழ்மட்ட அரசு ஊழியர்கள் போன்ற மலாய் மக்களுக்கு, இது உண்மையிலேயே கவலையளிக்கும் விஷயமாக உள்ளது – 61 ஆண்டுகளாக சமூக அடிப்படையிலான கொள்கைகளை நடைமுறைபடுத்தியப் பிறகும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில், தாங்கள் இன்னும் பின்னணியில் இருப்பதாகவே அவர்கள் உணர்கிறார்கள்,” என்று டாக்டர் நாசீர் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், 61 வயதான அம்னோ-பிஎன்னின் இனவாத அடிப்படையிலான கொள்கை, மலாய்க்காரர்களிடையே வருமான இடைவெளியை அதிகரித்தது மட்டுமின்றி, அவர்களுள் 20 விழுக்காட்டினரை மட்டுமே வளப்படுத்தியுள்ளது என்றும் டாக்டர் நசீர் கூறியுள்ளார்.

எனவே, இன்னமும் பொருளாதார ரீதியாக போராடி வரும், தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்த மலாய்க்காரர்கள், அவர்களுக்கு இன்னும் அந்தச் சிறப்பு உரிமை தேவை என்று நினைக்கிறார்கள்.

அதனால்தான், ஐசெர்ட் கையொப்பமானால், தங்களின் சிறப்புரிமைகள் அகற்றப்படக்கூடும் என்று அம்மக்கள் கவலைப்படுகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

“அனைத்து வகையான இன ஒடுக்குமுறைகளையும் அகற்ற வேண்டியது, முன்னோக்கி செல்லும் புதிய மலேசியாவுக்குப் பயனளிக்கும் என்று பி.எஸ்.எம். நம்புகிறது, ஆனால் அதேசமயம், வர்க்க அடிப்படையில் உறுதியான மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

“இன அடிப்படையில் அமையாத சமூக வளர்ச்சித் திட்டங்கள், சமுதாயத்தில் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதோடு; இன அடிப்படையிலான கொள்கைகளால் பயன்பெறும் சில மலாய்க்காரர்களையும் அந்நீரோட்டத்தில் இருந்து அகற்றும்,” என்று அவர் கூறினார்.

அம்னோ-பிஎன் அறிமுகப்படுத்திய இனவாத அடிப்படையிலான கொள்கைகளை, ஹராப்பான் மறுபரிசீலனை செய்யத் தவறினால், அது பெரும்பான்மை மலாய்க்காரர்களிடையே இருக்கும் பொருளாதார இடைவெளியை இன்னும் அதிகரிக்கும் என்றார் அவர்.

“விவசாயிகள், பால் மரம் சீவுபவர்கள், சிறு தோட்ட விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் என, அடிமட்ட மக்களிடம் இறங்கிவந்து, வர்க்க அடிப்படையிலான உறுதியான நடவடிக்கைகளை ஹராப்பான் எடுக்க வேண்டுமென பி.எஸ்.எம். புதிய அரசாங்கத்திடம் முன்மொழிகிறது,” என்று டாக்டர் நாசிர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.