காகாசான் குவாசா தீகா (ஜி3) என்ற ஒரு கூட்டத்தினர் அரசமைப்புச் சட்டத்தில் மலாய்க்காரர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தகுதியைத் தகர்ப்பதற்கு டிஎபி கொண்டிருப்பதாக கூறப்படும் திட்டத்திற்காக அதை ஒழித்துக்கட்டுவதற்கு சூளுரைத்துள்ளது.
53 அரசு சார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதிப்பாதாகக் கூறிக் கொள்ளும் அக்கூட்டத்தினரை ரேகி ஜெஸ்ஸி அல்லது ரவீந்தர் சிங் வழிநடத்துகிறார்.
இன்று, அக்கூட்டத்தினரின் முதல் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரேகி, அவர்கள் அமைத்துள்ள கூட்டணியின் இலட்சியம் அரசமைப்புச் சட்டத்தில் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள், இஸ்லாம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளுக்கு சவால் விடும் எந்த ஒரு முயற்சியையும் நிறுத்துவதாகும் என்றார்.
அனைத்து வகையான இனப் பாகுபாடுகளை அகற்றுவதற்கன ஐநாவின் அனைத்துலக ஒப்பந்தத்தை (ஐசெர்ட்) அங்கீகரிப்பதற்கு புத்ரா ஜெயா காட்டும் அக்கறை அரசமைப்புச் சட்டத்தில் மலாய்க்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் தகுதியை அகற்றுவதற்கான டிஎபி திட்டத்தின் ஓர் அங்கமாகும் என்று ரேகி கூறிக்கொண்டார்.
ஐசெர்ட்டை ஆதரித்து ஊக்கமூட்டுபவர் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் லிம் கிட் சியாங். இந்நாட்டில் இனவாதத்தின் தந்தை லிம் கிட் சியாங். அவர் யூதர்களின் திட்டத்தைக் கொண்டு வருகிறார் என்று கூறிய ரேகி, ஐசெர்ட் ஒரு சமயப் பிரச்சனை. நமது நாடு தனித்தன்மையுடையது. நீங்கள் மலாய்க்காரர் என்றால், நீங்கள் நிச்சயமாக ஒரு முஸ்லிம் என்றாரவர்.
ஆகவே, ஐசெர்ட் இந்நாட்டில் இஸ்லாத்தின் தகுதிக்கு எதிரான ஒரு வகையான பாகுபாடாகும் என்று அவர் கோலாலம்பூரில் இன்று கூறினார்.
இக்கூட்டணியின் ஆலோசகராக அஸ்வான்டின் ஹம்சா அறிவிக்கப்பட்டார். இவர் ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) என்ற அமைப்பில் ஈடுபட்டிருந்தவர்.
ரேகியின் துணைத் தலைவர் அம்ரான் அஹமட் நோர். இவர் 14-ஆவது பொதுத் தேர்தலில் கட்சியில் இருந்துகொண்டே டிஎபியை பகிரங்கமாக குறைகூறினார்.
ஜி3 ஓர் இனவாத அமைப்பல்ல, அதன் நோக்கம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது மட்டுமே என்று கூறிய அஸ்வான்டின், நாங்கள் இனவாதிகள் அல்ல. எங்கள் அடுத்த வீட்டுக்காரர்கள் சீனர்கள். சீன வியாபாரிகள் எங்கள் (ஜி3) உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாங்கள் “பங்சா டிஎபிக்கு” எதிரானவர்கள். அவர்கள் இனவாதிகள் மற்றும் விகாரமானவர்கள் என்றார்.
டிஎபி நாட்டை அழிப்பதற்குமுன், “பங்சா டிஎபி” அழிக்கப்பட வேண்டும் என்று துணைத் தலைவர் அம்ரான் கூறினார்.