தனது முகநூல் பக்கத்தில், நகைச்சுவையாக தான் பதிவிட்ட ‘சிலிப்பர்’ தொடர்பான தகவலை, செய்தியாக்கி வெளியிட்டு, பூதாகரமாக்கிய மலேசியாகினி மற்றும் ‘தமிழ் மலர்’ நாளிதழை, ‘சிலிப்பர்’ விஷயத்தை விட்டுவிட்டு, மக்களுக்கு அவசியமானதை எழுதுமாறு, மலேசிய சோசலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் வலியுறுத்தினார்.
நவம்பர் 19-ம் தேதி, ‘சிலிப்பர் அணிபவர்கள் ஒன்றுபட வேண்டும். அது மலிவானது, வசதியானது. விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான சிறப்பு பகுதி, நீதிமன்றம் மற்றும் சில அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில், சிலிப்பர் அணிபவர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்? சிலிப்பருக்கு எதிராக பாகுபாடு காண்பதில் என்ன நியாயம் இருக்கிறது?’, என தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அம்முகநூல் பதிவைச் செய்தியாக்கி, பி.எஸ்.எம். தலைவர் வெளியிட்ட அறிக்கை போன்று, ‘சிலிப்பர் அணிபவர்கள் ஒன்றுபட வேண்டும்’ என்றத் தலைப்பில், மலேசியாகினி செய்தி வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, பலர் சமூக ஊடகங்களில் அச்செய்தியைப் பகிர்ந்து, அருட்செல்வன் மற்றும் பி.எஸ்.எம்.-ஐ வசைப்பாடும் கருத்துகளைப் பதிவிட்டனர்.
அருட்செல்வன் அச்செய்தியைத் தான் நகைச்சுவையாக வெளியிட்டதாக தெரிவித்தப் பின்னர், மலேசியாகினி தனது செய்தியின் தலைப்பைச் சற்று மாற்றியமைத்தது.
மலேசியாகினி மட்டுமின்றி, தமிழ் மலர் பத்திரிக்கையும் நேற்று அச்செய்தியை வெளியிட்டிருந்ததாக அருட்செல்வன் மலேசியாஇன்று, தொடர்பு கொண்டபோது தெரிவித்தார். அவர்களையும் தொடர்புகொண்டு விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.
“மலேசியாகினி என் பதிவைச் செய்தியாக்கி வெளியிட்டுள்ளது, அதை எழுதியர் பெயர்கூட அங்கு இல்லை, இது தீங்கிழைக்கும் நோக்கோடு வெளியிடப்பட்டது என நான் கருதுகிறேன்.
“முதலில், பி.எஸ்.எம்.-இன் அதிகாரப்பூர்வ அறிக்கை போன்று வெளியிட்டுவிட்டு, பிறகு அந்தக் கதையையும் தலைப்பையும் மாற்றி அமைத்து, அது என் முகநூலில் நையாண்டியாக பதிவிடப்பட்டது என்று மலேசியாகினி கூறியுள்ளது.
“நான் என் முகநூலில் பல முக்கியமான விஷயங்களை எழுதுகிறேன், வருங்காலங்களில் அதனையும் ஒரு கதையாக்கி, எழுத வேண்டுமென நான் மலேசியாகினியைக் கேட்டுக்கொள்கிறேன். ஊடகத் துறைக்கு ஒரு தொழில் தர்மம் இருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
“பி.எஸ்.எம். வெளியிட்ட அறிக்கை என்றால், அதனை நாங்கள் தெளிவாகச் சொல்லிவிடுவோம், என்னுடைய இடுகையைப் படித்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.
“உண்மையில், அந்த மஇகா தலைவர் சிலிப்பர் அணிந்து சென்றதில் எனக்கொரு பிரச்சினையும் இல்லை. முதலில் விமான நிலையத்தில் ‘விஐபி லேன்’ என்று ஒன்று இருக்கக்கூடாது. அனைவரும் விஐபி-யாக கருதப்பட வேண்டும்,” என்றார் அவர்.
இன்று, பெரும்பாலான மக்கள் செய்தியின் தலைப்புகளுக்கு எதிர்வினையாற்ற தொடங்கிவிடுகிறார்கள், அதனால் ஆன்லைன் செய்தி தலைப்புகளை இப்போதெல்லாம் மிகவும் கவர்ச்சியாக எழுத ஊடகவியலாளர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.
“பெரும்பான்மையான மக்கள், கையில் இருக்கும் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ள சிரத்தை எடுப்பதில்லை. நீங்கள் பி.எஸ்.எம். வலைதளத்தைச் சென்று பார்த்தால் உங்களுக்குப் புரியும், பி.எஸ்.எம்., B40 மற்றும் M40 மக்கள் எதிர்நோக்கும் பொதுச் சுகாதார சேவை, மலிவு வீடு, பொதுப் போக்குவரத்து எனப் பல பிரச்சனைகளைக் காயாண்டு வருகிறது.
“எனவே, யாரும் மலிவான விளம்பரம் தேட, பிறரின் முகநூல் பதிவுகளைச் செய்தி ஆக்க வேண்டாம், உண்மை தெரியாமல், அதனைப் பகிர்ந்து கருத்து தெரிவிக்கவும் வேண்டாம்,” என எஸ் அருட்செல்வன கேட்டுக்கொண்டார்.