மலாய்-முஸ்லிம் என்ஜிஓ-களின் கூட்டணியான உம்மா, டிசம்பர் 8-இல், டட்டாரான் மெர்டேகாவில் எல்லாவகை இனப் பாடுபாட்டையும் ஒழிக்கும் ஐநா அனைத்துலக ஒப்பந்தத்தில்(ஐசெர்ட்) அரசாங்கம் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க குறைந்தது 500,000 பேரைத் திரட்டப் போவதாக சூளுரைத்தது.
அதன் தலைமைச் செயலாளர் மன்சூர் இப்ராகிம், அதிகாரிகள் அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அந்த ஐநா ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி நடப்பது உறுதி என்றார்.
“எத்தனை என்ஜிஓ-கள் பேரணியில் சேர்ந்து கொள்ளும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது ஆனால், உம்மாவில் இடம்பெற்றுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட என்ஜிஓ-கள் நிச்சயம் பங்கேற்கும்.
“குறைந்தது 500,000 பேரை எதிர்பார்க்கிறோம். ஏற்பாட்டாளர் என்ற முறையில் உம்மா பேரணிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பேரணி நடக்கும்”, என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது மன்சூர் தெரிவித்தார்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் டிசம்பர் 8-இல் தலைநகரில் ஐசெர்ட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணியை நடத்தப்போவதாக நவம்பர் 17-இல் அறிவித்திருந்தனர்.
இதனிடையே , மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி ஐசெர்ட் விவகாரத்தில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அம்னோ, பாஸ் பேரணியில் கலந்துகொள்வது குறித்து பெர்காசா இன்னும் முடிவெடுக்கவில்லை , ஆனால் அதுவும் ஐசெர்ட்டை எதிர்ப்பதாக இப்ராகிம் கூறினார்.