மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் இளைஞர்கள் மலேசியாவில் அழுக்கான, ஆபத்தான, சிரமமான (3டி) வேலைகள் செய்ய விரும்புவதில்லை ஆனால் , அதே வேலைகளை வெளிநாடுகளில் செய்ய அவர்கள் தயங்குவதில்லை என்பதை ஒப்புக்கொண்டார். அந்த வகை வேலைகளுக்கு இங்கு சம்பளம் குறைவாக இருப்பதுதான் காரணம் என்றும் சொன்னார்.
அவ் வேலைகளுக்கான சம்பளத்தை உயர்த்தினால் இளைஞர்கள் இங்கேயே தங்கி வேலை செய்யத் தொடங்குவார்கள்.
“நம் இளைஞர்களில் பலர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள் அதுவும் 3டி வேலைகள் செய்வது உண்மைதான். காரணம் நல்ல சம்பளம் கிடைக்கிறது.
“நாமும் சம்பளத்தையும் மற்ற சலுகைகளையும் உயர்த்தினால் வெளிநாடுகளில் வேலை செய்ய நினைக்கும் பலர் இங்கேயே தங்கி வ்டுவார்கள்”, என மக்களவையில் கேள்வி நேரத்தின்போது குலசேகரன் கூறினார்.
கைரி ஜமாலுடின் (பிஎன் -ரெம்பாவ்) கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அமைச்சர் அவ்வாறு கூறினார். இளைஞர்களில் பலர் குறைவான சம்பளம் காரணமாக இங்கு 3டி வேலைகளைச் செய்ய விரும்புவதில்லை என்ற தோற்றப்பாடு நிலவுகிறதே குறைந்தபட்ச சம்பளத்தை ரிம1,500 ஆக உயர்த்துவது இளைஞர்களை 3டி வேலைகள் பக்கமாகக் கவர்ந்திழுக்குமா என்றவர் கேட்டிருந்தார்.
அது வெறும் தோற்றப்பாடு அல்ல. அதுதான் உண்மை என்று கூறிய குலசேகரன், அமைச்சு 3டி வேலைகள் பக்கமாகக் கவனம் செலுத்துவது நல்லது என்றார். ஏனென்றால் , இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர் அங்குதான் வேலை செய்கிறார்கள்.