முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசியது உண்டு என்றும் மே9 பொதுத் தேர்தல் நடந்து முடிந்த அன்றிரவுகூட அவருடன் பேசியதாகவும் தெரிவித்தார்.
“ஆம், பேசினேன்(மே 9-இல்). எப்போதுமே அவருடன் தொடர்பில் இருந்து வந்திருக்கிறேன். மற்றவற்றோடு அவரின் நலம் விசாரிப்பேன்”. இன்று காலை சினார் ஹரப்பான் முக நூல் பக்கத்தில் நேரலையான ஒரு நேர்காணலில் நஜிப் அவ்வாறு கூறினார்.
அந்நேர்காணலில், அன்வார் செராஸ் மருத்துவமனையில் இருந்தபோது அவரைத் தொடர்புகொண்டு பேசினீர்களா என்று வினவப்பட்டது. சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த அன்வார் சிகிச்சைக்காக அந்த மருத்துவ மனையில் இருந்தார்.
செப்டம்பரில் அன்வார், மே9 இரவில் பொதுத் தேர்தலில் பிஎன் தோல்வி கண்டதை அடுத்து நஜிப் தம்மை அழைத்துப் பேரம்பேச முனைந்தார் என்று கூறியிருந்தார்.
“விடாமல் பேசிக் கொண்டே இருந்தார்- ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது. எங்களுக்கு(பிஎன்) தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என்றார்.
“முடிவில் நான் சொன்னேன், இதோ பாருங்கள் சட்டப்படி நான் இன்னும் சிறையில்தான் இருக்கிறேன்…..இதுதான் உங்களின் கடைசி அழைப்பு. இதற்குப்பின் எதுவானாலும் நீங்கள் (பிரதமர் பதவி ஏற்கப்போகும் டாக்டர்) மகாதிருடன்தான் பேச வேண்டும் என்று.
“அதன் பின்னர் அவர் சற்று நேரம் மெளனமானார்”, என்று அன்வார் கூறியிருந்தார்.
இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த நஜிப், பக்கத்தான் எம்பிகளை பிஎன்னுக்கு இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
“இல்லைவே இல்லை. சாட்சிகள் இருக்கிறார்கள். பல முக்கிய தலைவர்கள் என் இல்லத்தில் இருந்தனர். ஹரப்பான் எம்பிகளை இழுத்துக்கொள்ளுவது பற்றியோ விலைக்கு வாங்குவது பற்றியோ நாங்கள் விவாதிக்கவே இல்லை. அந்த வதந்தி எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.
“அப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அவசரக் காலம் பிரகடனம் செய்ய நான் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தைக் கூட்டப் போகிறேன் என்றொரு குற்றச்சாட்டு. அதுவும் உண்மையல்ல”, என்றவர் சொன்னார்.