காகாசான் 3 மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார் குவான் எங்

 

மலாய் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கோவில்களுக்கு திசை திருப்பி விட்டதாக குற்றம் சுமத்தும் காகாசான் 3 என்ற புதிய கூட்டணி மன்னிப்பு கோர வேண்டும் மற்றும் அக்குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

நேற்று, அக்கூட்டணி நடத்திய அதன் தொடக்க நிகழ்ச்சியில் கூறப்பட்டவை உண்மையல்ல. ஆனால் அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவு பரவலாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தாம் பெற்ற சட்ட ஆலோசனையின்படி சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கோர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களின் பெயர்கள் தமக்குத் தெரியாது. அவர்கள் கூறிக்கொண்டதற்கு அவர்கள் ஆதாரத்தைக் காட்ட வேண்டும் அல்லது அவர்கள் கூறியதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல், நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று குவா எங் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர்கள் பேச்சுகள் பற்றி போலீஸ் புகார் செய்யப்படும், ஏனென்றால் இது இனங்களுக்கிடையில் நெருக்கடி நிலையை உருவாக்கும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது என்றாரவர்.