பிரதமர்: வேதா மாறிவிட்டார், என்னைப் போலவே

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஹிண்ராப்ட் தலைவராக இருந்தபோது வெளியிட்ட ஓர் அறிக்கை தொடர்பில், பதவி விலக வேண்டுமென்ற பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும், பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தியை, பிரதமர் துன் டாக்டர் மகாதிர் தற்காத்து பேசியுள்ளார்.

“நமக்கு எல்லாம் கடந்த காலம் என்று ஒன்று உண்டு, என்னைப் போல, நான் அம்னோவிலிருந்து வந்திருக்கிறேன்.

“நான் அம்னோவிலிருந்து வந்திருக்கிறேன் என்ற ஒரு காரணத்திற்காக, இப்போது நான் பக்காத்தான் ஹராப்பானுடன் இருக்க முடியாது என்று சொல்ல முடியுமா,” என்று மகாதீர் கேள்வி எழுப்பினார்.

மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு எதிரான பாகுபாடு பற்றிய, வேதமூர்த்தியின் சர்ச்சைக்குரிய அறிக்கை, ஏமாற்றத்தின் விளைவாக எழுந்தது, அவர்களின் பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை ஈர்க்க வேண்டுமென்ற முயற்சியில் எழுந்தது என்று மகாதிர் கூறினார்.

“ஆனால், அது முன்னர். இப்போது அவர் அரசாங்கத்தில் இருக்கிறார்.

“அவர் அப்போதைய கருத்தில் இருந்து மாற்றிவிட்டார்,” என்று செர்டாங்கில், சர்வதேச விவசாய, தோட்டக்கலை மற்றும் சுற்றுலா கண்காட்சி (மஹா) 2018-ஐ தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் தெரிவித்தார்.

மனு போடுவது, இராஜினாமா செய்யக்கோரும் கடிதம் அல்ல

10 ஆண்டுகளுக்கு முன்னர், மலேசியாவைக் குறைகூறுவது போல் அமைந்த அந்த வீடியோ கிளிப்பைப் பற்றி வேதமூர்த்தி விவரித்துள்ளார். அக்குற்றச்சாட்டுகள், இன்றைய நிர்வாகத்தில் இருந்து மிகவும் மாறுபட்டது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

2007 நவம்பரில், ஹிண்ட்ராப் பேரணிக்குப் பின்னர், டச்சு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், சிறுபான்மையினர், குறிப்பாக மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு எதிரான பாகுபாடுகள் பற்றி அவர் விமர்சித்திருந்தார்.

மக்களின் ஒற்றுமையைக் காக்கும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டுள்ளது, ஓர் அமைச்சர் என்ற வகையில், அவர் தன் கடமையைச் செய்ய மக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

அதுமட்டுமின்றி, அவர் பதவிவிலக வேண்டுமென்று கோரிக்கை விடுவது தேவையற்ற ஒன்று, அது தன்னுடைய அறிவுறுத்தலும் அல்ல என்று மகாதிர் தெரிவித்தார்.

“மக்கள் மனுக்களைப் போடலாம், ஆனால் அது யாரையும் இராஜினாமா செய்ய தீர்மானிக்கும் ஒன்றல்ல. அந்த நேரத்தில் அவர் (வேதமூர்த்தி) மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்தார், மலேசியாவில் நீதி இல்லை என்று வெளிநாட்டவர்களுக்குச் சுட்டிக்காட்ட அந்த அறிக்கையை வெளியிட்டார்.

“ஆனால், தற்போது அவர் அந்தக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. என்னைக்கூட முன்னர் மக்கள் கொடும்பாவி (மஹா ஸாலிம்) என்றார்கள், ஆனால் இப்போது கொடும்பாவி தலைவராக இருக்கிறேன்,” என்றார் அவர்.

சர்ச்சைக்குரிய அறிக்கை மட்டுமின்றி, அனைத்துவிதமான இனரீதியான பாகுபாடுகளையும் (ஐசெர்ட்) அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு பற்றிய தனது நிலைப்பாடு காரணமாகவும், வேதமூர்த்தி பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

அதேசமயம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான வேதமூர்த்தியின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஒரு மனு தொடங்கப்பட்டுள்ளது.