நாட்டில் இன மற்றும் மத பதட்டங்கள் ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்தனர் என்று கருதி, போலிசார் விசாரணைக்கு அழைத்த ஒன்பது பேரில், அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி ஆகியோரும் அடங்குவர்.
இன்று, புக்கிட் அமானில் நடந்த பத்திரிக்கையாளர் சிறப்பு சந்திப்பு ஒன்றில், காவல்துறை துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார். 160-க்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில் இவர்களில் இன்னும் சிலரை, மிக விரைவில் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் இருவரோடு, ஜாரிங்கான் மெலாயு மலேசியா (ஜேஎம்எம்) தலைவர் அஸ்வான்டின் ஹம்ஸா, அரசியல் புலொக்கர் மற்றும் காபுங்கான் 3 தலைவர் ரக்வீண்டிர் சிங் @ ரேக்கி ஜெஸ்ஸி, ஜி3 துணைத் தலைவர் அம்ரான் அஹ்மட் நோர், தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் ச்சியோங் யோக் கோங் மற்றும் த்ராஸ் சட்டமன்ற உறுப்பினர் ச்சோவ் யூ ஹூய் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
ஒரு விளம்பரத்தாரரை அவமதித்ததன் அடிப்படையில், முகமட் ஏடி மொஹமட் @ ஏடி ரெஜாங் மற்றும் லாவ் ஷான் தியேன் ஆகியோரின் வாக்குமூலங்களையும் போலிஸ் பதிவு செய்யவுள்ளதாக நூர் மேலும் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவிய, ஏடி ரெஜாங்கிற்கு எச்சரிக்கை விடுவதுபோல் அமைந்த அந்த வீடியோ கிளிப்பின் பின்னனியில் இயங்கியது லாவ் என நம்பப்படுகிறது.
விசாரணைத் தொடர்பான எந்தவொரு குறிப்பையும் நூர் ரஷிட் குறிப்பிடவில்லை என்றாலும், அப்பெயர்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், அவ்விசாரணை ஐசெர்ட் சிக்கல்களில் ஒன்றாகும் என்று நம்பப்படுகிறது.