அன்வார் : பெரிய தர்பான், பல பட்டங்கள், ஆனால் 1எம்டிபி பிரச்சனையில் வாய்மூடி கிடக்கின்றனர்

1எம்டிபி ஊழல்களை அனுமதித்ததற்காக, அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அறிவுஜீவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் வரலாற்றில், மிக மோசமான அந்த ஊழலைப் பார்ந்த்துகொண்டு, வாய்மூடி கிடந்த அவர்களும் இதில் குற்றவாளிகளே என்று அவர் கூறினார்.

“அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள், அரசாங்க ஊழியர்களில் சிலர், வெறுமனே அமைதியாக மட்டும் இல்லை, மாறாக இனம், மக்கள், நாடு ஆகியவற்றின் இறையாண்மைக்கு எதிரான சதிகளைப் பாதுகாக்கவும் தயாராக இருந்துள்ளனர்.

“ஓர் ஒழுக்கக்கேடான நிகழ்ச்சி, அமைப்பின் பேரழிவு, அவ்வளவு பெரிய கொள்ளை ஏற்பட்டதற்குக் காரணம், சில அரசியல் தலைவர்களுடைய பேராசை மட்டுமல்ல, மாறாக இனம் அல்லது மதத்தின் பெயரில், சில அறிவுஜீவிகள் மௌனமாக இருந்ததும்தான்.

“தலைப்பாகை பெரிதாக உள்ளது, தாடி நீளமாக இருக்கிறது, படித்து பல பட்டங்களும் வாங்கியுள்ளனர், ஆனால், மனசாட்சியும் நல்ல நெறிமுறைகளும் இல்லை,” என்று இன்று காலை, மலாயாப் பல்கலைக்கழகத்தில், சொற்பொழிவாற்றிய போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

“1எம்டிபி மோசடி நமக்கெல்லாம் ஒரு பாடம், அதனை அழிக்க முடியாது, ஆனால் சரி செய்யலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த கட்டடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் பேராசிரியர்களால் கல்வியை மட்டுமே கொடுக்க முடிகிறது, ஆனால் ஒரு மனிதனின் சொந்த வாழ்க்கை, அவர்களின் குடும்பம், மக்கள் மற்றும் நாட்டுக்குத் தேவையான தார்மீகம் மற்றும் நெறிமுறை கோட்பாடுகளைக் கட்டியெழுப்ப முடிவதில்லை,” என்று அவர் வலியுறுத்தினார்.