இன, மத பாகுபாடு ஒழிய உடன்பாடு வேண்டும்

-கி.சீலதாஸ். நவம்பர் 23, 2018.

 

ஐநாவின்  எல்லாவித  பாகுபாடுகளையும்  நீக்கும்  அனைத்துலக  ஐசெர்ட் (ICERD)  ஒப்பந்தத்தில்  மலேசியா  கையொப்பம்  இடுவதை  சில  அமைப்புகள்  எதிர்க்கின்றன.  குறிப்பாக,   அரசமைப்புச்  சட்டத்தில்  மலாய்  சமுதயத்திற்கான  பாதுகாப்பு  விதிமுறைகள்  பாதிப்படையும்  அல்லது  அந்த  பாதுகாப்பு  விதிமுறைகள்  நீக்கப்படும்  என்ற  அச்சம்  இருப்பதாக  கூறுகின்றனர்.  பிரதமர்  துன்  மகாதீர்  கூட  இந்த  ஐசெர்ட்  ஒப்பந்தத்தில்  மலேசிய  கையொப்பமிடுவது  பல  பிரச்சினைகளை  எழுப்புவது  மட்டுமல்ல  அரசமைப்புச்  சட்டத்தைத்  திருத்தவேண்டும்.  இது  இன்றைய  காலகட்டத்தில்  சாத்தியமில்லை  என  விளக்கியுள்ளார்.

இந்த  ஐ.நாவின்  ஒப்பந்தத்தின்  நோக்கம்  என்ன?  இன. மத  வேறுபாடுகளை  வைத்து   ஓர்  இனத்தின்  பாதுகாப்பை  வளர்ப்பது,  ஆதரிப்பது  போன்ற  நடவடிக்கைகளை  ஒழிப்பதாகும்.  இன்று  உலகமே  ஒரு  கிராமம்  எனும்போது,  அங்கே  இன, மத  பாகுபாடுகள்  இருக்கக்கூடாது.  அப்படிப்பட்ட  பாகுபாடுகள்  மனித  நேயத்திற்கு  முரணானவை.  இந்த  நாகரிக  உலகில்  வேற்றுமைகளைக்  களைய  முயற்சிகள்  மேற்கொள்ள  வேண்டுமேயன்றி  வேற்றுமைகளை  நிரந்தரமாக்கி  மக்களைப்  பாடுபடுத்தி  அவமானப்படுத்துவது  நியாயமாகாது.

SRILANKA-UN/

ஐ.நா  உடன்படிக்கை  நாட்டு  மக்களை  பாகுபடுத்தும்  தன்மையை  அகற்ற  வலியுறுத்துகிறது.  மனிதர்கள்  யாவரும்  சமம்  என்பது  நாகரிக  உலகின்  பொருள்நிறைந்த  கோட்பாடு.  எந்த  நாகரிக  மனிதனும்,  இயக்கமும், சமஉரிமையை  எதிர்க்காது  என்பது  உண்மை.  ஆனால்,  காலங்காலமாக  நிகழ்ந்த  பிற  நாட்டு  ஆக்கிரமிப்புகள்,  பொருளாதார,  மொழி,  சமய  ஆக்கிரமிப்பு  உலகின்  வேற்றுமைகள்  வளர்வதற்கு  உதவினவே  அன்றி  ஒற்றுமையை  அல்லது  மனிதத்  தன்மையை  வளர்க்கும்  தராதரத்தைக்  கொண்டிருக்கவில்லை  என்பதும்  வரலாறு  கூறும்  உண்மையாகும்.

காலனித்துவவாதிகளின்  நடவடிக்கைகளை  கூர்ந்து  கவனித்தால்  ஓர்  உண்மை  புலப்படும்.  ஒரு  நாட்டை  ஆக்கிரமித்துவிட்டு,  அதை  தங்கள்  நலனுக்காக  பயன்படுத்த  திட்டம்  போடும்போது,  தொழிலாளர்கள்  பற்றாக்குறை  தென்படும்.  அதை  நிவர்த்தி  செய்யும்  பொருட்டு  அவர்களின்  மற்ற  காலனிகளிலிருந்து  தொழிலாளர்களை  தருவிப்பது  இயல்பு.  இப்படி  கொண்டுவரப்பட்டவர்கள்  பல  இனத்தவர்கள்,  பல  மொழிகளைக்  கொண்டவர்கள்,  பல  சமயங்களைப்  பேணுபவர்கள்.  மக்களை  பிரித்து  ஆளுவதில்  திறமைவாய்ந்த  காலனித்துவாதிகள்  பூர்வகுடிகள்  மற்றும்  புலம்  பெயர்ந்த  மக்களிடையே  பாகுபாட்டை  வளர்த்தார்கள்.  அவர்கள்  ஒன்றுபடுவதை  உற்சாகப்படுத்தும்  நடவடிக்கைகள்  ஏதும்  எடுத்ததாகத்  தெரியவில்லை.  அந்தப்  பாகுபாடு  எண்ணத்திலிருந்து  மக்கள்  மீளவில்லை.  இனவாத  அரசியலுக்கு  அந்த  பாகுபாடு  கொள்கை  பயன்பட்டது.  அத்தகைய  பாகுபாடு  சுதந்திரத்திற்குப்  பின்னர்  புது  பொலிவு  பெற்று  பல்லின  இனத்திற்கு,  இயக்கத்திற்கு  தடையாக  விளங்கியது.  அது  திருத்தப்படவேண்டும்  என்றால்  அதில்  நியாயம்  இருக்கிறதா  என்பதை  கண்டறிய  வேண்டும்  அல்லவா?

இன,  சமய  பாகுபாட்டை  நீக்குவது  இந்த  ஐநா  அமைப்பின்  தலையாய  நோக்கம்.  இதில்  இன, சமய  உயர்வு  தாழ்வு,  ஒதுக்கல்,    நிறம்,  ஜாதி,  தேசிய  அல்லது  இனவாரியாக  பாகுபாடுகள்  அனைத்தையும்  தடைசெய்வதை  ஊக்குவிப்பதாகும்.  இந்தப்  பகுதி  கடும்  சர்ச்சையை  எழுப்பியுள்ளது.

இன,  சமய  வெறுப்பை  வெளிப்படுத்துவதைத்  தவிர்ப்பதும்  மற்றும்  பாகுபாட்டைக்  காக்கும்  சட்டங்களை  அகற்றுவதும்  முக்கிய  குறிக்கோளாகும்.  அதோடு  மக்கள்  பொறுமைகாக்கும்  தரத்தை  அடைவதற்குக்  கல்வி  முறை  அமைக்கவேண்டும்  என்பதும்  அதன்  கோட்பாடுகளில்  அடங்கும்.  இவை  நியாயமானவை.

இதுவரை  88  நாடுகள்  இந்த  உடன்பாட்டில்  கையொப்பமிட்டுள்ளன.  179  நாடுகள்  அதில்  அங்கம்  வகிக்கின்றன.  மலேசியா  இன்னும்  கையொப்பமிடவில்லை.

இன்று உலக  நாடுகள்,  அதுவும்  குறிப்பாக  பலம்  வாய்ந்த,  வளமிகு  நாடுகள்  வழிகாட்டியாக  இருக்க  வேண்டிய  காலமாகும்.  மனிதர்கள்  எல்லோரும்  சமம்  என்பதில்  மாற்றுக்கருத்துக்கு  இடம்  இல்லை  என்பதை  ஒப்புக்கொள்ளும்போது  மனித  சமுதாயத்தில்  பின்தங்கிய  நிலையில்  இருப்போரை  ஒரு  பொழுதும்  மறக்கக்கூடாது.  எனவே,  பின்தங்கியவர்களை  முன்னேற்ற  நிலைக்குக்  கொண்டுவரவேண்டும்  என்பது  காலத்தின்  கோரிக்கையாகும்.  அதே  சமயத்தில்  இன,  சமய  பாகுபாட்டை  வைத்து  சிறுபான்மையினரை  ஒழித்துக்கட்டும்  தரத்தைக்  கொண்டிருக்கக் கூடாது.  பெரும்பான்மையினருக்குப்  பாதுகாப்பு,  அவர்களின்  மக்கள்   தொகை;  அரசியல்  அதிகாரம்,  சிறுபான்மையினருக்கோ  சட்டம்  தரும்  பாதுகாப்பாகும்  இந்த  இரண்டையும்  எடைபோட்டுப்  பார்க்கும்போது  ஒருநாட்டின்  இன, மத  வேறுபாட்டை  அடிப்படையாக  வைத்து  அரசியல்  நடத்துவது  நியாயமானதாக  கருத  இயலாது.  ஆனால்,  சந்தர்ப்ப  சூழ்நிலை  காரணமாக  சில  வித்தியாசமான  ஏற்பாடுகள்  தேவைப்படலாம்.  அந்தத்  தேவையைப் பூர்த்தி  செய்கிறது  நமது  அரசமைப்புச்  சட்டத்தின்  153-ஆம்  பிரிவு.

1957-ஆம்  ஆண்டு  மலாயாவுக்கு  சுதந்திரம்  வேண்டுமென  கோரிக்கை  முன்வைக்கப்பட்டபோது  இந்தியச் சமுதாயம்   எவ்வித  அரசியல்  அதிகாரத்தையோ   பொருளாதார  வலிமையையோ  பெருமளவிலான  மக்கள்  தொகையையோ    கொண்டிருக்கவில்லை.  அது  ஒரு  சிறுபான்மை  சமுதாயமாக  இருந்தது.  அதனிடம்  இருந்தது  வெறும்  உழைப்பு,  தோட்டத்  தொழிலாளர்கள்  என்ற  அந்தஸ்து  மட்டும்தான்.

சீனர்  சமுதாயத்தின்  சுதந்திர  உணர்வும்,  அதன்  தியாக   நடவடிக்கைகளும்,  சிந்தனைகளையும்  குறைத்து  மதிப்பிடக்  கூடாது.  சீன  சமுதாயத்திடம்  பொருளாதார  வலிமை  இருந்தது.

சுதந்திரத்தின்  போதும்,  அதற்குப்  பிறகும்  புது  வாழ்வு, சுதந்திர  வாழ்வு,  தன்மான  வாழ்வு,  நியாயமான  மனித  அங்கீகாரம்  கிடைக்கும்  என்ற  நம்பிக்கையில்தான்  பெரும்பான்மை  சமுதாயத்தோடு  கைகோர்த்து,  ஒற்றுமையோடு  சுதந்திர  வேட்கையை  வலுப்பெறச்  செய்தனர்  சிறுபான்மையினர்.  அந்த  நிலையில்  இருந்து  எந்த  மாற்றமும்  இல்லை.

ஐசெர்ட்  ஒப்பந்தத்தை  எதிர்ப்பவர்களின்  அடிப்படை  காரணம்  என்ன?  அரசமைப்புச்  சட்டத்தின்  153-ஆவது  பிரிவு  பாதிப்புறும்  என்பதே!  இந்த  அச்சத்துக்கு  இடம்  தருவது  வேதனையானது,  காரணம்  153-ஆவது  பிரிவை  எந்தச்  சக்தியாலும்  மாற்ற  இயலாது.  இது  அனைவருக்கும்  தெரியும்.  ஆனால்  ஒரு  கருத்தை  அரசயலாக்கி  அதில்  ஆதாயம்  காணவேண்டும்  என்கின்ற  நிலை  ஏற்படும்போது  நியாயக்  கருத்துக்கு  இடமளிக்கக்கூடாது  என்கின்ற  மனோபாவத்தை  வெளிப்படுத்துவதாகும்.

இன, மத  வேறுபாட்டைப்  பெரிதுப்படுத்திக்  காட்டாமல்  வேற்றுமையில்  ஒற்றுமையைக்  காணமுடியும்  என்பதை  உணர்ந்து  அந்த  இலக்கைத்  தேடி  செல்வதே  சீரிய  மனித  நேய  பண்பாகும்.  ஐநாவின்  ஐசெர்ட்  உடன்பாடு  யாருடைய  உரிமையையும்  பறிக்கவில்லை,  மாறாக  எல்லோரையும்  மனிதர்களாக  நடத்துவதை  வலியுறுத்துவதோடு  வெறுப்புணர்வை  களைவதை  நாடுகிறது.  பெரும்பான்மையினரின்  உரிமைகளை,  சலுகைகளை  ஐசெர்ட்  நீக்கும்படி  கோரவில்லை.  ஆனால்  வெறுப்புணர்வைத்  தடை  செய்யும்படி  கோருகிறது.  இந்த  வெறுப்புணர்வு  கலாச்சாரம்  கடந்த  சில  காலமாக  மலேசியாவில்  தலைதூக்கி  சங்கடத்தை  ஏற்படுத்தியிருப்பதை  மறுக்க  முடியுமா?  அல்லது  மறக்க  முடியுமா?

சிறுபான்மையினரும்  அவர்களின்  எதிர்காலச்  சந்ததியினரும்  இந்த  நாட்டின்  நலனிலும்  அதன்  எதிர்காலத்திலும்  கவனமும்  அக்கறையும்  கொண்டவர்கள்.  அந்த  நிலையிலிருந்து  எந்த  மாற்றத்திற்கும்  இடம்  இல்லை.  இன, மத  வெறுப்பை  விரும்பாத  சமுதாயமாக  மலேசிய  சமுதாயம்  உருவாகி  வலிமை  பெறவேண்டும்  அதுதான்  தேவை.  இதுதான்  நாம்  சிந்திக்க  வேண்டியவைகளாகும்.