ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு பாஸ் உத்தரவு

 

ஐநாவின் அனைத்து இன பாகுபாடுகளை அகற்றும் அனைத்துலக ஒப்பந்தத்திற்கு (ஐசெர்ட்) அங்கீகாரம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க டிசம்பர் 8 இல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் பேரணியில் பாஸ் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாஸ் உறுப்பினர்கள் அனைவரும் பிற்பகல் மணி 1.00-க்கும் மாலை மணி 6.00-க்கும் இடையில் டாத்தாரான் மெர்டேக்காவில் கூட வேண்டும் என்று கூறுகிறார் பாஸ் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான்.

அந்த எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கம் ஐசெர்டையும் பெடரல் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான வேறு எந்த மனித உரிமைகள் ஒப்பந்தத்தையும் அங்கீகரிப்பதற்கான எந்தத் திட்டத்தையும் எதிர்ப்பதாகும் என்றாரவர்.

மேலும், இஸ்லாத்தின் நிலை, ஆட்சியாளர்கள், மலாய்க்காரர்கள் மற்றும் பகசா மலாயு ஆகியவற்றுக்கு எதிரான எந்த ஒரு அச்சுறுத்தலையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று அவர் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறுகிறார்.

டாத்தாரான் மெர் டேக்காவுக்கு புறப்படு முன்னர் பாஸ் உறுப்பினர்கள் அனைவரையும் நான்கு இடங்களில் – மஸ்ஜித் நெகாரா, மஸ்ஜிட் ஜாமெக் கம்போங் பாரு, மஸ்ஜித் டாங் வாங்கி மற்றும் சோகோ – கூடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.