உங்கள் கருத்து: ஐசெர்ட்டை அங்கீகரிக்கும் விசயத்தில் கோழைத்தனமாக பின்வாங்கி விட்டாரே மகாதிர்!

பிஎம்ஓ: அரசாங்கம் ஐசெர்ட்டை அங்கீகரிக்காது

சக மலேசியன்: பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். செப்டம்பர் மாதம் ஐநா பொதுப் பேரவையில் பேசியபோது எல்லா வகை இனப்பாகுபாடுகளையும் ஒழிக்கும் ஐநாவின் அனைத்துலக ஒப்பந்தம்(ஐசெர்ட்) அங்கீகரிக்கப்படும் என்றவர் கூறினார். அங்கீகரிக்கும் துணிச்சல் கொஞ்சமும் இல்லை என்கிறபோது அப்படிச் சொன்னது ஏன்?

179 நாடுகள் அதை அங்கீகரிக்க இசைவு தெரிவித்துள்ள வேளையில் அதை அங்கீகரிக்காத நாடுகளின் வரிசையில், அதுவும் மியான்மார், வட கொரியா போன்ற நாடுகளுடன் நாமும் சேர்ந்து கொண்டிருப்பது வெட்கக் கேடான விசயம் அல்லவா.

இனம் தொடர்பான விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளன. எதற்கெடுத்தாலும் சத்தம் போடும் லிம் கிட் சியாங், லிம் குவான் எங் போன்றோர் வாய்மூடி மெளனம் காப்பது ஏன்?

ஜெரார்ட் லூர்துசாமி: ஐசெர்ட் அரசமைப்பின் 153 சட்ட விதியுடன் ஒத்துப் போகாது என்று யார் சொன்னது?

அந்த விவகாரம்தான் சட்டத்துறைத் தலைவர் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதே, அவர் அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கும்வரை காத்திருக்காதது ஏன்?

விஜர்47: கோழைத்தனமாக பின்வாங்கி விட்டீர்களே, மகாதிர்.

ஹெர்ரி: ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்கும் தங்கமான வாய்ப்பைக் கைவிட்டதை எண்ணி வருந்துகிறேன். உள்ளும் புறமும் தீவிரவாதிகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து விட்டது பக்கத்தான் ஹரப்பான்.

கொக்னிடோ எர்கோ சம்: பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்.பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது மட்டுமல்ல, பணிந்தும் போயிருக்கிறோம்.

ஹரப்பானில் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும். ஒன்றுபட்ட மலேசியாவை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சியைக் காலாவதியான இரண்டு கட்சிகள் அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டன.

லோட்ஸ்டார்:  இப்போதைக்கு இது சரியான முடிவே. ஐசெர்ட்டை அங்கீகரித்தால் மலேசியாவில் உண்மையான மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. வேண்டுமானால் நாங்களும் அங்கீகரித்தோம் என்று சொல்லி உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம்.
ஆனால், அவ்விவகாரம் அம்னோ -பாஸ் இனவாதிகளுக்குச் சாதகமாக அமைந்து விடும்.

பெயரிலி _1401030415: இப்போதைக்கு இவ்விவகாரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு இதைவிடவும் பெரிய விவகாரமான ஊழல்வாதிகளைச் சிறையில் அடைத்து வைப்பதற்குக் கவனம் செலுத்துவது நல்லது.

அதன் பின்னர் பொருளாதாரத்தை மறு நிர்மாணம் செய்ய வேண்டும். மலாய்க்காரர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும். பொருளாதாரம் வலுவாக இருந்தால் மக்களின் சகிப்புத்தன்மை கூடும்.. புரிந்துணர்வு அதிகரிக்கும்.

நேர்ப் பேச்சு: விவேகமான முடிவுதான். அதே வேளை, குறுகிய புத்தி உள்ளவர்கள் இவ்விவகாரத்தை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க அரசாங்கம் அதன் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்தியம்ப வேண்டும்.

அதை அங்கீகரித்தாலும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடாது. அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம் மக்களுக்கு இன்னும் இல்லை.

பெயரிலி _91ee9ba: ஐசெர்ட்டை அங்கீகரிப்பது அவசியம் என்று எவ்வளவுதான் நியாயப்படுத்திப் பேசினாலும் பெரும்பாலோர் அதை ஏற்பதற்குத் தயாராக இல்லை..

இன இணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும், அதற்கு இதுவே சரியான முடிவு என்பதில் மகாதிருடன் ஒத்துப் போகிறேன். எதிர்காலத்தில் ஒரு சரியான நேரத்துக்காகக் காத்திருப்போம்.

இதைவிட நாட்டை முன்னுக்குக் கொண்டு செல்வது போன்ற முக்கியமான காரியங்கள் காத்திருக்கின்றன.. எல்லா மக்களும் ஒத்த கருத்துடன் ஒருமித்துப் பாடுபட்டால்தான் அதைச் சாதிக்க முடியும்.

ஐசெர்ட்டில் கையெழுத்திடுவது மக்களின் சிந்தனைப் போக்கை உடனடியாக மாற்றி விடாது.

சுயென் டிக்: எனக்குள் இருக்கும் இலட்சியவாதி, “கோழைகளே, இனவாதிகளின் கோரிக்கைகளுக்குத் தலைவணங்கி விட்டீர்களே” என்று ஓலமிடுகிறது. என் பகுத்தறிவோ இதுதான் சரியான முடிவு என்கிறது.

இன்னும் நம்பிக்கை உண்டு: மலேசியாகினியின் ஆங்கில, பகாசா மலேசியா கருத்துகளைப் படிக்கையில் மனம் கலக்கமடைகிறது, கவலை கொள்கிறது. இரண்டுக்குமிடையில்தான் எவ்வளவு பெரிய வேறுபாடு.

பலர் தங்களின் வாக்குகள்தான் பக்கத்தான் ஹரப்பானுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது அதனால், அது மாற்றங்களைக் கொண்டுவரக் கடமைப்பட்டுள்ளது என்று நினைக்கிறார்கள். ஆனால், மலாய்க்காரர்- அல்லாதார் ஒட்டுமொத்தமாக ஹரப்பானுக்கு வாக்களித்தால்கூட ஒரு 25 விழுக்காடு வாக்குகளைத்தான் அவர்களால் கொடுக்க முடியும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

மலாய்க்காரர்கள் ஹரப்பானுக்கு வாக்களித்தது வேறு காரணங்களுக்காக. அரசமைப்பின் 153வது சட்ட விதியை அகற்றுவது அதில் ஒன்றல்ல.

ஆக, எளிதில் உடைந்து போகக் கூடியதாக , நொறுங்கிப் போகக் கூடியதாக அல்லவா இருக்கிறது நம் சமுதாயம். அதற்கு இந்த ஐசெர்ட் விவகாரம் ஒன்றே சான்று.

இடைவெளியைக் கடந்து பொது நன்மைக்காக அனைவரும் ஒன்றுகூடுவது எக்காலம்?