பிகேஆர் தேர்தல் | பிகேஆர் தலைமைத்துவத் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், இறுதி முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பொதுவாக, வாக்களிப்பு முடிந்த சில மணி நேரத்தில், கிளை அலுவலகத்தில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை, கட்சியின் மத்தியத் தேர்தல் குழு (ஜேபிபி) பதிவேற்றிவிடும்.
ஆனால், நவம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் நடைபெற்ற தேர்தல்களின் இறுதி முடிவுகள், இந்தச் செய்தி எழுதப்படும் நேரம் வரை, இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வேட்பாளர்களுக்குக் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை, அவர்களிடம் அறிவிக்கப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது, ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமானது அல்ல அல்லது அது பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
கடந்த வாரம், கட்சியின் தேசிய மாநாட்டில், பிகேஆரின் பிரதான பதவிகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
கடைசி வாக்கெடுப்புக்கான உண்மையான முடிவுகள் தெரிவிக்கப்படாமல், சரவாக்கிலுள்ள பல கிளைகளின் தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்ய முடியவில்லை.
இதற்கிடையில், ஜேபிபி தலைவர் ரஷிட் டின்-ஐ தொடர்பு கொண்டபோது, தேர்தல் முடிவுகள் தாமதமானதை அறிந்துள்ளதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
பிகேஆர், கடந்த செப்டம்பரிலிருந்து, கட்சியின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல்களை நடத்தியது.
நாட்டிலுள்ள மற்றக் கட்சிகளைப் போலன்றி, அனைத்து தகுதி வாய்ந்த உறுப்பினர்களுக்கும் – கிளை உறுப்பினர்கள் முதல் மத்தியம் வரை – வாக்களிக்கும் உரிமையைப் பிகேஆர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.