‘பாசாங்கு’க்காரரான பிடிபிடிஎன் தலைவர் பதவி விலக வேண்டும், மாணவர்கள் கோரிக்கை

தேசிய உயர்க்கல்வி கடனுதவி கழகத் (பிடிபிடிஎன்) தலைவர், வான் சைஃபுல் வான் ஜான் பதவிவிலக வேண்டுமென்று கோரி, நாடு முழுவதிலும் இருந்து கூடிய சுமார் 400 உயர்க்கல்விக் கூட மாணவர்கள், பிடிபிடிஎன் கோபுரம் நோக்கி அணிவகுத்து சென்றனர்.

மலேசிய இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பின் (காமிஸ்) தலைவர், முஹம்மது பைஸுட்டின் முகமது ஜாய், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை, வான் சைஃபுல் நிறைவேற்றவில்லை, அதுமட்டுமின்றி, அவர் கொடுக்கும் காரணங்கள் நியாயமற்றதாக இருக்கின்றன என்று வலியுறுத்தினார்.

“அம்னோ மற்றும் பிஎன் முன்னர் செய்ததை விட, பக்காத்தான் ஹராப்பானின் இந்த நடவடிக்கை இன்னும் கொடூரமானது. முன்னர், அம்னோ-பிஎன், பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்த, மாணவர்களுக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தது.

“ஆனால், ஹராப்பானின் நடவடிக்கை மிகவும் வருத்தமளிக்கிறது, 2019 தொடக்கம், பிடிபிடிஎன் கடனைச் செலுத்த, சம்பளக் கணக்கிலிருந்து கழித்து விடுவார்கள்,” என்று முஹம்மது, இன்று பிடிபிடிஎன் கோபுரம் முன் உரையாற்றிய போது அவர் கூறினார்.

இன்று மதியம் 2 மணியளவில், ஜாமேக் மசூதியில் இருந்து, ஜாலான் யாப் க்வான் செங்- இல் இருக்கும், பிடிபிடிஎன் கோபுரம் நோக்கி அம்மாணவர் அணி நடந்துச் சென்றது. கருப்பு சட்டைகளை அணிந்து, கறுப்புக் கயிற்றைத் தலையில் கட்டி, அரசாங்கத்திற்கு அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, ‘பிடிபிடிஎன் வாக்குறுதியை நிறைவேற்று’ என்ற பதாகைகளைக் கைகளில் ஏந்தி, ‘மாணவர் சமூகம் வாழ்க’, ‘மாணவர்களே எழுச்சி பெறுங்கள்’, ‘கொடுங்கோன்மையை நிராகரியுங்கள்’ என்று முழக்கமிட்டதோடு; கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் பதவி விலக வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சுமார் 3.10 மணியளவில், அவர்கள் கோபுரத்திற்கு வந்து சேர்ந்தனர், அங்குப் போலிஸ் அதிகாரிகள் பாதுகாவலில் ஈடுபட்டிருந்தனர்.

நாடு முழுவதிலும் உள்ள காமிஸ் மாணவர்கள், ஒவ்வொரு மாநிலத்தின் பிடிபிடிஎன் அலுவலகத்திற்கும் சென்று, சம்பளம் RM4,000-ஐ அடையும் வரை, அரசாங்கம் அவர்களின் ஊதியத்தில் கடன் தொகைகளைக் கழிக்கக்கூடாது என்று மனு அளிக்கவுள்ளதாக, பைஸுட்டின் தனது உரையில் தெரிவித்தார்.

“இந்த அமைப்பு முறை ஏழைகளையும் குறைந்த வருமானம் பெறுபவர்களையும் மேலும் நசுக்குகிறது,” என்று அவர் கூறினார்.

14-வது பொதுத் தேர்தலின் வாக்குறுதிகளை, ஹராப்பான் அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதைத் தெரிவிப்பதற்காக, அக்குழுவினர், ஒரு கை படத்தின் மூலம், தங்கள் சிறுவிரலை ‘வெட்டி’க்கொள்ளும் ஒரு சடங்கையும் செய்தனர்.

சுமார் 5 கி.மீ. தூரம் தூக்கிவந்த ஒரு பொம்மை மற்றும் தட்டைகளையும், கோபுர நுழைவாயிலிலேயே கைவிட்டுச் சென்றனர்.

“திங்கட்கிழமை பணிக்குத் திரும்பும்போது, வான் சைஃபுல் இவற்றையெல்லாம் பார்க்கட்டும்,” என்றும் பைஸுட்டின் ஒலிபெருக்கியில் கூறினார்.

மாலை 3.50 மணியளவில், அவர்கள் அனைவரும் அமைதியாகக் கலைந்துச் சென்றனர்.