தலைமைக்கணக்காய்வாளர்: 1எம்டிபி கணக்கறிக்கையைத் திருத்த நஜிப் உத்தரவு

தலைமைக் கணக்காய்வாளர் மதினா முகம்மட், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மற்றவர்களும் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் குறுக்கிட்டுத் திருத்தங்கள் செய்தது உண்மைதான் என உறுதிப்படுத்தினார்.

நஜிப்பின் தனிச் செயலாளர்கூட 1எம்டிபி-இல் ஜோ லோ சம்பந்தப்பட்ட பகுதிகளை நீக்க உத்தரவிட்டார்.

கணக்காய்வுத்துறை தயாரித்து வைத்துள்ள காலவவரிசைப் பட்டியல் ஒன்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய மதினா, தனக்குமுன் தலமைக் கணக்காய்வாளராக இருந்த அம்ப்ரின் புவாங்கையும் அப்போதைய அரசாங்கத் தலைமைச் செயலாளரையும் நஜிப் 2016 பிப்ரவரி 22-இல் தம்மை வந்து சந்திக்குமாறு பணித்துள்ளார் என்றார்.

“அறிக்கையில் சில பகுதிகளை அகற்றி விடும்படி முன்னாள் பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார்”, என மதினா கூறினார்.

அடுத்த நாள் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையை “நெருக்கடிநிலை அறிக்கை”யாக அரசாங்கம் வகைப்படுத்தி இருப்பதாக 1எம்டிபி தணிக்கைக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 24, 2016-இல் மற்றொரு கூட்டம் நடைபெற்றது. 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கை குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட அதில், அலி, அலி அம்ப்ரின், அப்போதைய 1எம்டிபி தலைவர் அருள் கந்தசாமி, நிதி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

“அக்கூட்டத்தைத் தொடர்ந்து அறிக்கையிலிருந்து மேலும் பல பகுதிகளை அகற்றுமாறும் திருத்தி எழுதுமாறும் உத்தரவிடப்பட்டது”, என மதினா கூறினார்.

பிப்ரவரி 25-இல், அருள் கந்தாவைச் சந்தித்துக்குமாறு அலி தணிக்கைக் குழுவைப் பணித்தார். அச்சந்திப்பைத் தொடர்ந்து மேலும் சில நீக்கங்கள், திருத்தங்கள் நிகழ்ந்துள்ளன.