ஐசெர்ட் சர்வதேச மாநாட்டில் கையொப்பமிடத் தேவையில்லை என அரசாங்கம் முன்னரே முடிவெடுத்துவிட்டது, அதற்கும், நாட்டின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்களுக்கும், குறிப்பாக ரந்தாவ் தொகுதி மறுதேர்தலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளதாக, பெர்னாமா தகவல்கள் தெரிவித்தன.
“ஆரம்பத்தில் இருந்தே நான், நம் நாட்டில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்கள் இருப்பதால், ஐசெர்ட்-க்கு ஒப்புதல் அளிப்பது சிக்கலானது என்று கூறுயிருக்கிறேன்,” என்று அவர் நேற்று இரவு லங்காவியில் தெரிவித்தார்.
ஐசெர்ட்-ஐ ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மலேசியர்கள் தெளிவாக சுட்டிக்காட்டிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.
“அரசியல் காரணங்களால் அல்ல (ஐசெர்ட்டை மறுப்பது), நாம் மக்களின் விருப்பத்திற்குக் கட்டுப்படுகிறோம்,” என்று அவர் விளக்கமளித்தார்.
புதிய அரசாங்கக் கொள்கைகள் மற்றும் அரசாங்க எந்திரம் வகிக்கும் பாத்திரங்களை அறிமுகப்படுத்த, பல தொடர்ச்சியான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று இரவு லங்காவியில், அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தது, பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்து, மேற்கொள்ளப்படும் இரண்டாவது முயற்சி என்றும் டாக்டர் மகாதீர் மேற்கோளிட்டுள்ளார்.
“உண்மையில், அவர்கள் ஏற்கனவே நிர்வாக இயந்திரங்களைச் சரிசெய்துவிட்டனர், ஆனால், அனைத்து தரப்பினரும் அரசாங்கத்தின் குறிக்கோள்களை அறிந்துகொள்ள, இன்றைய தினம் அவர்கள் (கடிதத்தைச் சமர்ப்பித்து) எழுத்துப்பூர்வமாக அதனை என்னிடம் தெரிவிக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
அடுத்ததாக, கஸானா நேஷனல்-உடனான கூட்டத்திற்கும் தலைமைதாங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். அக்கூட்டத்தில், கஸானா நேஷனல் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு நிறுவனங்கள் – மலேசிய ஏர்லைன்ஸ் உட்பட- குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக அவர் கூறினார்.