1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கை திருத்தப்பட்டது என்று கூறப்படுவது உண்மையாயின் அதைச் செய்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசாங்க அதிகாரிகளும் துரோகிகள் ஆவர் என்று உத்துசான் மலேசியா குறிப்பிட்டது.
“அப்படி உண்மையிலேயே நடந்திருந்தால் அது நஜிப்மீதும் மற்ற அரசாங்க அதிகாரிகள்மீதும் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும்”, என்று ஆவாங் செலாமாட் என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டிருந்த உத்துசான் மலேசியா தலையங்கம் கூறிற்று.
தலைமைக் கணக்காய்வாளர் மதினா முகம்மட் 2016இல் தேசிய கணக்காய்வுத்துறை தயாரித்திருந்த 1எம்டிபி அறிக்கையில் நஜிப்பும் மற்றவர்களும் தலையிட்டுத் திருத்தங்கள் செய்ததாகக் கூறியிருந்ததை உத்துசான் சுட்டிக்காட்டியது.
முன்னாள் தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் பூவாங், முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா ஆகியோருக்குத் தெரிந்தே அது நடந்துள்ளது என்பதால் அவர்களும் அதற்கு “ ஆதரவு” என்றுதான் பொருள் என உத்துசான் கூறியது.