14-வது பொதுத் தேர்தலில், ஆட்சி மாற்றம் நடந்தபோதும், செரண்டா தமிழ்ப்பள்ளியைக் கட்டிக்கொடுப்பதாக தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்று செரண்டா வட்டார இந்தியர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.
இன்று, சிலாங்கூர், செரண்டா சீனப்பள்ளி முன் அமைதி மறியலில் இறங்கிய, செரண்டா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 100 பேர், பிரதமர் துன் மகாதிர், இப்பள்ளி கட்டுமான பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.
“நிலம் தயாராகிவிட்டது, நிதி ஒடுக்கீடும் இருக்கிறது, ஆனால் கட்டுமானம் இன்னும் தொடங்கப்படவில்லை.
“ஹராப்பான் ஆட்சி அமைத்து, இன்றோடு சரியாக 200 நாட்கள் ஆகிவிட்டன. ஹராப்பான் தலைவர் ஒருவர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமானால், இந்தப் பிரச்சனையை 24 மணி நேரத்தில் தீர்த்துவிடுவோம் என்று முன்பு முழங்கியிருந்தார்.
“இப்போது 200 நாட்கள் ஆகிவிட்டன, ஆனால் ஒரு முன்னேற்றமும் இல்லை,” என்று செரண்டா தமிழ்ப்பள்ளி நடவடிக்கைக் குழுவின் தலைவர் எம் ஜீவா தெரிவித்தார்.
பிரதமரின் கவனத்திற்கு இப்பிரச்சனையைக் கொண்டு செல்வதைவிட, தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.
“இப்பள்ளி கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த சொல்லி, டாக்டர் மகாதிர், முகிடின் யாசின் மற்றும் பி வேதமூர்த்தி ஆகிய மூவருக்கும் கடிதம் வழங்கினோம். ஆனால், அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவரான, ரகுநாதன் எனும் பெற்றோர், தனக்கு 13 வயது இருக்கும்போது, உலு சிலாங்கூர் முன்னாள் எம்பி ஜி பழநிவேலு, அப்பள்ளியைக் கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் என்று தெரிவித்தார்.
“இப்போது எனக்குத் திருமணம் ஆகி, 4 பிள்ளைகளும் உள்ளனர். இன்றுவரை அப்பள்ளியின் கட்டுமானம் தொடங்கப்படவில்லை,” என்றார்.
தற்போது, செரண்டா வட்டாரப் பிள்ளைகள் தாங்கள் பயிலும் பள்ளி தொலைவில் இருப்பதால், காலை 5 மணிக்கெல்லாம் தயாராக வேண்டியுள்ளது என்று ஜீவா கூறினார்.
“பள்ளி பேருந்து கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதால், இப்பிரச்சனைக்குப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும்,” என அவர்கள் வலியுறுத்தினர்.